புத்தரின் கோப்பை
நேற்று என் வீட்டிற்கு புத்தர் வந்திருந்தார். நான் கத்தியுடன் அவரை நெருங்கினேன். பதற்றத்துடன் கேட்டார்.
"பொறு என்ன செய்யப்போற"?
" இல்ல.. புத்தர் உன் எதிரில் வந்தால் அவரைக் கொன்றுவிடுன்னு எங்கியோ படிச்ச ஞாபகம்"
"பாவி நல்லவேல பண்ணப்பாத்த. அப்டி ஒக்காரு" என்றார்
பிறகு உபசரிக்கும் விதமாக அவரிடம் கேட்டேன்.
"என்ன சாப்பிடுறீங்க ? டீ காபி"?
அவர் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தார்.
" என்னங்க"?
"இல்ல. எதாச்சும் குடிக்கிறதைப்பத்தி ஒண்ணுமில்ல. புத்தர் வீட்டுக்கு வந்தா வெசம் வெச்சுக்குடுத்திருன்னு நீ எதாச்சும் படிச்சிருந்தா என்ன செய்யிறதுன்னுதான் யோசிக்கிறேன்"
இருவருமே சிரித்துவிட்டோம். நான் தேநீர் கலக்க எழுந்தபோது அவர் சொன்னார்.
"எதை வேண்டுமானால கொண்டுவா. ஆனால் ஒரு நிபந்தனை "
"என்னங்க"?
" நீ கொண்டுவரும் பொருள், குற்றத்தின் ரேகை படியாத கோப்பையில் ஊற்றியெடுத்து வரவேண்டும்"
நான் யோசித்தேன். என் வீட்டில் அப்படியொரு கோப்பை எதுவும் இருக்குமெனத் தோன்றவில்லை. புத்தரைக்காத்திருக்கச் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டில் விசாரித்தேன். அங்கும் இல்லையென்றார்கள். எதிர்வீடு அடுத்தத்தெரு என்று அலையாய் அலைந்துபார்த்தேன் கிடைக்கவேயில்லை அப்படியொரு கோப்பை.
சலித்துச் சோர்ந்த சமயத்தில் எதிர்ப்பட்ட ஆர்க்கியாலஜி நண்பன் கூறினான். தன்னிடம் புத்தர் பயன்படுத்தின பழைய கோப்பை ஒன்று இருப்பதாக. நிரம்ப வசதியாய் போயிற்று. அவர்தான் புத்தராயிற்றே. அவர் கோப்பை சுத்தமாகத்தான் இருக்குமென்று வெற்றியுடன் வீடு திரும்பினேன். சீரியல் பார்த்துக்கொண்டிருந்த புத்தரிடம் தேநீர் வழியும் அவர் கோப்பையை நீட்டினேன்.
சிரித்தபடியே வாங்க மறுத்துவிட்டார். எனக்கு ஆச்சரியம்.
"என்னங்க இது உங்க கோப்பைங்க. பாருங்க இதுல எந்த ரேகையுமே இல்ல" என்றேன்.
புத்தர் மந்தகாசப்புன்னகையும் கூச்சமுமாகக் கூறினார்.
"சாரிப்பா. நா கிளவுஸ் போட்டிருந்தேன்".