தமிழ்த் திரைச் சோகங்கள்
தமிழ்த் திரைச் சோகங்கள்
***************************************************
திரைக் கதை
***************************
அத்தை மகள் ரத்தினமாம் முறைமாமன் முத்தரசாம்
சொத்தனைத்தும் அவள் பெயரில் எழுதியிட்ட பட்டயமாம்
மொத்தமாய் சொத்திற்கும் வாரிசு இவளெனவே
முத்தரசின் பார்வையிலே நேசமற்ற பாசமழை
நகர்விட்டு கிராமத்துள் ஆசிரியப் பணியுறவே
நகரியப் பேருந்தில் வந்திறங்கும் நாயகனாம்
நாகரீக உடையழகில் நாவிலுறும் ஆங்கிலமாம்
மகராசன் இவன்தன்னை ரத்தினமும் காதலிக்க
அறைதன்னுள் பூட்டிவைத்த இரண்டுகால் பசுமாடாய்
முறைமாமன் கவனத்தில் நாயகியோ படும்பாடு
இறையாய் நாயகனும் நாயகியை மீட்டெடுக்க
குறையின்றி வணக்கத்தை நல்காட்டி முடித்திடுவார் !
வசனம் -- உரையாடல்
**********************************
முன்னணி மாவட்டப் பேச்சுமுறை அதன் ஊடே
கன்னித் தமிழதனை பலவாறாய் கொலைசெய்து
முன்னணியில் வாயசைத்து பின்னணியில் பேச்சிட்டு
மனமொன்றா வகையினிலே கனமில்லா உரைநடைகள் !
ஒளிப்பதிவு
************************
கருப்புநிறக் கூவத்தை சீவனுள்ள நதியாக்கி
இருக்கும் ஒளிதன்னை இல்லாது போல் ஆக்கி
இருட்டுப் பின்னணியில் திருட்டுநிலா நல்காட்டி
அருகில் முகங்காட்டி தொலைவில் உடல்காட்டும் !
இசைஎனும் இம்சை
**********************************
சுத்தமான இசை ஒறுத்து சுட்டுவிட்ட மெட்டுபற்றி
கத்தலோங்கி சொல்விளங்கா பாடலுக்கு இசையமைப்பு
செத்தகாட்சி வந்துறவே சங்கு ஊதும் பலமாக
முத்தக்காட்சி ஒன்றுமட்டும் ஒலியெழுப்பும் இதமாக !
சண்டைக் காட்சி
****************************
நலிவடைந்த தோற்றத்து கதையம்ச நாயகனும்
பலமுற்ற வில்லனவன் கைத்தடிகள் பலபேரை
சலிக்காது நல்பறந்து மொத்தமாய் துவைத்தெடுத்து
இளவிரல் ஒன்றினாலே மார்குத்தி சாகடிப்பார் !
(மாறாதோ தமிழ்த் திரையும் தீராதோ சோகங்கள் )