காதல் யாதெனில்
கசங்கிய நைட்டியும் கலைந்த முடியும்
உன்னால் ரசிக்க முடியும் எனில் அது தான் காதல்
முத்தம் இடுகையில் துர்நாற்றத்தையும் ரசிக்க முடியுமெனில்
அது தான் காதல்
உப்பில்லாத சாம்பாரையும் தாண்டி அதன் பின் இருக்கும்
உழைப்பை உன்னால் ரசிக்க முடியும் எனில்
அது தான் காதல்
ஒப்பீடுகள் இல்லாமல்
புகுத்தல்கள் இல்லாமல்
உன் மனைவியை ஏற்க முடியும் எனில்
அது தான் காதல்
தவறுகளை சத்தம் போட்டு ஒலிபரப்பாமல்
அணைத்து இதம் தர முடியும் எனில்
அது தான் காதல்
அலுவலகத்தில் இருந்து கசங்கி வரும்போது
இதமாய் தேநீர் தரமுடியும் என்றால்
அது தான் காதல்
நச்சரிப்புகள் இல்லாமல்
கணவனை ஏற்க முடியும் எனில்
அது தான் காதல்
அலுவலக கோவம் எல்லாம்
உன் தலையில் விழுந்தாலும்
ரணமாய் இருக்கும் கணவனின் இதயம் புரிந்தால்
அது தான் காதல்
நெஞ்சத்து பாரம்
கலங்காத கண்
சுடும் நெருப்பாய் விழும் வார்த்தைகள்
அதன் பின்னால் மறைந்திருக்கும்
உன் கணவனின் ஏக்கம் புரிந்தால்
அது தான் காதல்
சில்லறை சத்தமோ ரூபாயின் வாசமோ
எதுவாக இருப்பினும் நிறைவாக இருக்க முடியும் எனில்
அது தான் காதல்
காதலாகி கசிந்து உருகாவிடினும்
உன் கணவனின் சின்ன சின்ன செயல்களில்
அன்பை உணர முடியும் எனில்
அது தான் காதல்
நிறைவேறாத ஆசைகள் பல இருப்பினும்
நிறைவேற்றிய ஆசைகள் நினைத்து நகைக்க முடியும் எனில்
அது தான் காதல்
கணவனின் இயலாமையை பறைசாற்றாமல்
தோல்விகளை முத்தமிட முடியும் எனில்
அது தான் காதல்
கணவனின் அன்பை பாகபிரிவினை செய்யாமல்
இருக்கும் அன்பை பெருகவைக்க முடியும் எனில்
அது தான் காதல்
முதலில் நம்புங்கள்
நண்பர்களாய் மாறுங்கள்
காதலியுங்கள்
சரி தவறு இரண்டையும் காதலியுங்கள்
கோட்பாடுகள் இன்றி காதலியுங்கள்
காதல்
புரிந்துவிட்டால் அட்சயபாத்திரம்
இல்லையேல்
உம் கஷ்டம்.