மீண்டும் மீண்டும்
இரவு பகல் அறியாது இலக்குதனை அடைய
நான் வகுத்த பாதையில் பயணித்த வேளையில்
மீண்டும் மீண்டும் கண்களினால் தூது விட்டு
காதல் கொள்ள வைத்தாயே!
பத்துமாதம் சுமந்தவளை வைத்தேன் எந்தன் நெஞ்சிலே
அதில் பாதி இடம் கேட்டு வந்து பரிதவிக்க வைத்தாயே!
நெஞ்சமது சுகமான பாரமாகி போனாலும் உறுதி கொண்டேன்
மீண்டும் மீண்டும் பிறந்து வந்து இருவரையும் சுமக்கவே!
என்னை மாற்றி, என் நினைவை மாற்றி
மீண்டும் மீண்டும் உன்னை நினைக்க செய்தாயே!
காதலாலே கசிந்துருகி உன்னை காண துடிக்கையில்
நெஞ்சமதில் புயலடிக்க வைத்தாயே!
என்னை விலகி எங்குச் சென்றாய்? ஏன் சென்றாய்?
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
விடை தெரிந்த எவரும் இல்லை
நான் நிலை குலைந்து போகிறேன்!
மீண்டு வர நான் நினைத்த போதிலும்
மீண்டும் மீண்டும் உன் நினைவு
காற்றாற்று வெள்ளமாய்
கரை புரண்டு ஓடுதே!
எண் திசையிலும் நீ
எப்பொருளிலும் நீ
மீண்டும் மீண்டும் என்னுள் தோன்றி
உன்மத்தம்கொள்ள வைத்தாயே !
இன்று விலகி இருந்தாலும்
விரைவில் வருவாய் என்னிடம்
நீ இருக்கும் என் நெஞ்சம்,
மீண்டும் மீண்டும் சொல்லும் ஓர் ஆருடம்.