மீண்டும் மீண்டும்

மணற்கோடுகள்....

மீண்டும்
அழித்தெழுதுவேன்
அதே மணற்கோடுகளை-

நிமிர்ந்து பார்க்க-
நெடுவானம் அருகிலும்
நீ,
தொலைவிலும் இருப்பாய்.

"என்னை மன்னிச்சிடுங்க,
எனக்கு,
வேற வழி தெரியலை"
பத்தாவது முறையாக
சுருதி மாற்றியும்,
வார்த்தைகளை மாற்றிப்போட்டும்
சொல்வாய் நீ!

இயலாமையில்
இதயம்கூட
இளைத்து போகும்.
எட்டிப்பார்க்கும் கண்ணீரை
இமைகளே உறிஞ்சிக்கொள்ளும்.

ஒரு
வேலையில்லாப் பட்டதாரியின்
காதல் தோல்விக்கு
வேறென்ன காரணம் இருக்க முடியும்-
வேலையில்லை என்பதைத் தவிர!

அறை திரும்ப,
அம்மாவின் கடிதம்
கதவு திறக்கும்.
அதன் -
ஒட்டிய பகுதிகளில்
இன்னும்,
கண்ணீரின் ஈரம்
காயாமலேயேயிருக்கும்.

பிரித்துப் படிக்க,
வழக்கமான நலவிசாரிப்புகளுக்குப்பின் -
மூன்றாம் தங்கையின்
பூப்பெய்தலும்-
முதல் தங்கைக்கான
வரன் தேடலும்
முக்கிய விஷயங்களாயிருக்க-

ஏனைய வரிகளில்-
அப்பாவின்
சாராய நெடியும்-
அம்மாவின்
ஆஸ்த்மாச் சத்தமும்-
ஆக்கிரமித்திருக்கும்.

இன்னும் மீந்த
இடங்களில்-
பாட்டியின் பாசம்
பதியப்பட்டிருக்கும்.

மீண்டும்
அழத்தொடங்கும்
இதயம்,
கண்ணீரைத் தொடர-
கனவுகளும் உப்புக்கரிக்கும்.

எழுதியவர் : நாராயணசுவாமி ராமச்சந்திர (16-Nov-15, 2:36 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 61

மேலே