மண்ணில் தமிழரின் மாண்பு --- ஒரு பா ஒருபஃ து ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்

எண்ணிலா மக்கள் எடுத்தப் பிறப்பினில்
மண்ணொடு மண்ணாய் மடிந்திடக் கண்டதால்
கண்ணின் இமைபோல் கருத்துடன் காத்தருளப்
பண்ணைத் தமிழரின் பண். (1)


பண்ணில் பரவசப் பாக்கள் வனையவும்
வெண்பா இலக்கணம் வேகமாய் நாடினேன் .
கண்ணில் தெரியும் கதிர்களின் காட்சிகள்
மண்ணில் தமிழரின் மாண்பு . (2 )


மாண்புடை மக்கள் மகத்துவம் சொல்லிடும்
காண்பவர் நோக்கிட காலமும் வந்திடும்
ஆண்டவன் நல்கிய அன்புடை நெஞ்சத்தை
வேண்டுகின்ற நாளிது வே. (3 )


வேராய்த் தமிழினை வேண்டியும் நின்றிட
வாராய்த் தமிழர்க்குள் வந்திடும் மாசுகள்
பாராய்த் தமிழரின் பண்பினில் மாண்புடைச்
சீராய்த் தமிழர் சிறப்பு . (4 )



சிறப்பாம் தமிழரின் சீரிய வாழ்வின்
பிறப்புத் தெளிவாய்ப் பிணக்கையும் நீக்கி
வறண்ட தமிழகமாய் வாடிடல் வேண்டா .
உறவாய்த் தமிழர் உவந்து . ( 5 )


உவந்துத் தமிழும் உலகினை ஆள
கவர்ந்த மொழியின் கனவினில் காட்சி
சிவந்த இதழினில் செந்தமிழ்ப் பேசி
தவிர்ப்பாய் பிறமொழி தான் . ( 6 )


தானமாய் மண்ணில் தழைக்கும் தமிழினைக்
கானமாய்க் கேட்டிடல் காலம் நலந்தரும் .
வானமா யோங்கிய வள்ளுவன் வாக்கிற்கு
மானமாய் நீக்கிடும் மாசு . ( 7 )


மாசற்ற செந்தமிழை மங்காத பைந்தமிழை
காசற்றக் கள்வனாய்க் காக்க மறுக்காது
வாசத்தின் வாக்கிற்கு வர்ணனைகள் சொல்லுகின்ற
பாசத்தால் பாடல்கள் பாடு . ( 8 )


பாடுதல் நன்றாகும் பண்பின் தமிழரெலாம்
நாடுதல் மாண்பினையும் நாளைநாம் பெற்றிடலாம் .
வாடுதல் வேண்டாமே வந்திடும் வெற்றிகள்
ஓடுதல் மண்ணின் உழைப்பு . (9 )



உழைப்பு தருமாம் உயர்வு தமிழர்
தழைக்கும் நிலமும் தரத்தில் உயர்ந்து
பிழைக்க மழையும் பிசகாது பெய்ய
எழிலாய்த் தமிழரும் எண்ணு . ( 10 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Nov-15, 1:02 am)
பார்வை : 74

மேலே