ஓ மழையே

ஓ மழையே !
ஏன் இப்படி
அடம் பிடித்து
அழுகிறாய் ?

காணாமல் போன கம்மாய்க்கள்
எலும்புருக்கி நோயுற்ற ஏரிகள்
குடில்களான குட்டைகள்
குறுகிப்போன குலங்கள்
என எல்லாமே உன்
சொத்துக்கள் தான் மழையே

அவைகளை தேடியே நீ அலைகிறாய்
அவைகளை இழந்தே நீ அழுகிறாய்
என்பது எமக்கு புரிகிறது

ஆனால்,
யாரிடம் எதை கேட்கிறாய் நீ ?
களவாணிகளிடம் கம்ப்ளெய்ண்டா?
கற்பழித்தவனே சாட்சியா ?
கொலைகாரனே நீதிபதியா?

நீ
எங்களை சூழ்ந்து கொண்டு
ஒப்பாரி வைத்து அழுகிறாயா?

உன் வாழ்விடத்தை அழித்தவர்களை
அழித்து அங்கே நீ வாழ வந்தாயா?

ஓ மனிதனே,

உன்
சூழ்ச்சியும் சூனியமும்
சக மனிதனிடம்
வேண்டுமானால் செல்லலாம்

எல்லாவற்றையும் இயக்கும்
இயற்கையிடம் எடுபடுமா?

இனியாவது மழை நீர்
வாழ்விடங்கள் அமைக்கப்படுமா?
அழிவின்றி காக்கப்படுமா ?


@செந்தில்குமார் ஜெயக்கொடி

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (30-Nov-15, 9:48 am)
Tanglish : o mazhaiyae
பார்வை : 95

மேலே