செந்தமிழே நீவாழ்க

திருவே தித்திக்கும் செந்தமிழே!
-----திக்கெட்டும் மணக்கும் சந்தனமே!
மருவே இல்லா மணிமொழியே!
-----மாசற்ற நிலவே மதுமலரே!

மார்கழி பொழிந்திடும் வெண்பனியே
-----மாசுவை தருகின்ற மாங்கனியே
மணம்மிக வழங்கிடும் மல்லிகையே
-----மண்ணில் உனைவெல்ல சொல்லிலையே

அகரத்தை முதலாய் நீகொண்டாய்
-----அனைத்திற்கும் முதலாய் நீநின்றாய்
சிகரத்தில் இருந்தே அனைவருக்கும்
-----சிங்காரக் காட்சித் தருகின்றாய்

முந்திப் பிறந்தப் பொற்பதமே!
-----முத்தமிழ் வடிவே கற்பகமே!
பந்திகள் போட்டே பலமொழிகள்
-----பாரினில் வளர்த்தாய் அற்புதமே!

குந்திக் கிடந்த அயல்மொழியோ
-----கும்மாளம் போடுது தமிழகத்தில்
மந்திகள் போன்றத் தமிழர்களால்
-----மணித்தமிழ் மங்குது தமதகத்தில்

ஐந்து இலக்கணங்கள் ஆய்தறிந்தாய்
-----ஐயமேயின்றி அரங்கம் கண்டாய்
முந்தும் மொழியாய் மாநிலத்தில்
-----முடக்கம் வென்று மிளிர்கின்றாய்

தென்றலில் நீயும் கலந்திருந்து
-----தெள்ளமுதாய் தினம் இனி்க்கின்றாய்
குன்றாத கலைபல தந்ததினால்
-----குறையாத நிலவாய் வளர்கின்றாய்

வாய்மை நேர்மை தூய்மைதனை
-----வையகம் முழுதும் வழங்குகிறாய்
தாய்மைப் பண்பும் இருப்பதனால்
-----தனிப்பெரும் மொழியாய் மிளிர்கின்றாய்

குமரக்கடவுள் துணை கொண்டு
-----குவலயம் கொண்டாட நீவென்றாய்
அமரர்கள் அனைவரும் வணங்குகின்ற
-----ஆண்டவன் மனதிலும் இடம்கொண்டாய்

கயலோடு புலியும்வில் கொண்ட
-----காவலர் மூவரின் அன்புகொண்டாய்
அயல்மொழி உனைக்கண்டு அஞ்சிவே
-----அற்புத இலக்கியம் பலதந்தாய்

ஏற்றம் தருகின்ற திருவிளக்காய்
-----எல்லோர் மனதையும் நிறைக்கின்றாய்
போற்றிடும் திருக்குறள் வடிவினிலே
-----பொன்னான உலகை ஆள்கின்றாய்

அருந்தவ தமிழே அகல்விளக்கே
-----அணிகள் பலகொண்ட ஆரணங்கே
மருந்தாய் மனநோய் நீ தீர்ப்பாய்
-----மங்காமல் எந்நாளும் மதிவார்ப்பாய்

அசையே இசையே நீவளர்க!
-----ஆற்றலின் ஊற்றே நீவாழ்க!
வசையே இல்லாத வாழ்வுதரும்
-----வாழிய செந்தமிழ் வாழியவே!

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (2-Dec-15, 4:20 pm)
பார்வை : 140

மேலே