இருட்டரசன்
மல்லிகை பூத்தது...
மந்திரிசபை கலைக்கப் பட்டது
மழைக்கால நிவாரணம்
வழங்கப்படாத காரணத்தால்
மன்னர் தண்டிக்கப் பட்டார்...
ஆட்சி அமைத்த அரசன்
போர்வை இல்லாதவர்களிடமிருந்து
தலையணைகளைப் பறித்தான்...
தூக்கம் விற்கப்படுமென
விளம்பரப் பதாகைகளை
வீதியெங்கும் தொங்க விட்டான்...
பதாகை ஓவியர்களுக்கு
கூழாங்கற்களை
கூலியாக வகுத்தான்...
கற்கள் தீர்ந்தபோழுது
கல் காய்க்கும் மரத்தின் விதைகள்
கொண்டுவரச் சொல்லி
காவலர்களை ஏவினான்...
கடலுக்குள் மலையெழுப்ப
காரியதரிசிகளுக்கு கட்டளையிட்டான்...
கொக்குகள் மனற்பரப்பில்
வசிக்கவேண்டுமென
விதி சமைத்தான்...
ரோஜாக் காய்களே
உண்ணத் தகுந்ததென
மக்களுக்கு உபதேசித்தான்...
கல்மர விதை தேடிப்போன
காவலர்கள் வீடு திரும்புகையில்
கலையாத மந்திரிசபை கண்டு
கதிரவன் சிரித்தது !
... மீ.மணிகண்டன்