திருமணத்திற்குப் பிறகு
இரு மனங்கள் இணைவதே திருமணம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. அப்படிப்பட்ட உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டால் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாள்வதே சாலச்சிறந்தது. ஆனால் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு போலவும், திருமணத்திற்கு பின்பு ஒரு போலவும் மாறிவிடுகிறார்களாம். அதாவது அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. இப்போதுள்ள நிலையே இதற்கு முக்கிய காரணம் எனலாம்..
இதை விளக்க ஒரு நகைச்சுவை கதை....
திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் கணவனும் மனைவியும் கோயிலுக்கு சென்றார்கள். அப்போது அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிறிய ஒரு முள் இருந்து மனைவியின் காலில் குத்திவிட்டது. உடனே கணவனுக்கு எங்கிருந்து கோவம் வந்ததோ தெரியாது . கோவத்தோடு சனியன் பிடித்த இந்த முள் என் மனைவியின் காலில் குத்திவிட்டதே என்று திட்டியவாறே தரையில் அமர்ந்து தன் மனைவியின் காலில் இருந்த முள்ளை மெதுவாக அகற்றிவிட்டார். கணவனின் அன்பைப் பாரத்து மனைவி பூரித்துப் போய்விட்டாள். ம் இப்படியே காலங்கள் மிக வேகமாக சுழன்றது.இந்தக் காலத்திற்கு ஏற்ப நாமும் சுழன்று தானே ஆகவேண்டும்.
ஆண்டொன்று போக மீண்டும் அதே கணவன் மனைவி கோவிலுக்கு, அவர்களின் திருமண நாளிற்கு வந்தார்கள். முன்பு போலவே ஒரு முள் மனைவியின் காலில் குத்திவிட்டது . அப்போது ஏற்கனவே உனக்கு முள் குத்தியிருக்கிறது ஆகவே பார்த்து வரவேண்டியது என்று கூறிவிட்டு மனைவி தன் காலில் இருந்து முள்ளை எடுக்கும் வரை காத்திருந்து விட்டு சுவாமி தரிசனத்திற்காக சென்றுவிட்டார். காலத்தின் சுழற்சியில் மாற்றங்கள் வந்து ஒட்டிவிட்டது. அதே காலம் இன்னும் இன்னும் வேகமாக சுழன்றோடி ஆண்டு இரண்டைக் கடந்து நின்றது.
மீண்டும் அதே திருமணநாள் அதே கோயில்.......
இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு கோயிலை வந்தடைந்தார்கள். இருதடவைகள் காலைப் பதம்பார்த்த முள் இந்த தடவையும் விட்டு வைக்க வில்லை. மனைவியின் காலை குத்திவிட்டது. உடனே வந்துதே பாருங்கள் கணவருக்கு கோவம். மனைவியைப் பார்த்து முறைத்துவிட்டு வேகமாக பதில் கூறினார். சனியன் பிடித்தவளே உனக்கு எத்தனை தடவை முள் குத்தினாலும் நீ திருந்தவே மாட்டாய். உனக்கு கண் இல்லையா? பார்த்து வர வேண்டியது தானே என்று வார்த்தைகளை வாரி இறைத்து விட்டார். பதிலுக்கு மனைவியின் உதடுகளும் வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்தது.
இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தான் புலப்படுகிறது. மாற்றங்கள் மட்டுமே மாறாத ஒன்று... மாற்றங்கள் எதுவாகிலும் அதை தாங்கி, சகித்து, விட்டுக்கொடுத்து வாழ பழகினால் வாழ்க்கை ரசனையாக இருக்கும். வாழ்க்கையை இதமாக்கி வாழ பழகுவோம்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
