நாக்கே என் நண்பன்
இனிப்போடு கசப்பினையும் இனம்பிரித்துக் காட்டி
இன்சுவைகள் அனைத்தையுமே உணர்த்திடுமே நாக்கு
ஆறுசுவைகள் நிறைந்துள்ள உணவுக்குள் உப்பு
அதிகமாக சேர்த்துவிட்டால் அறிவுறுத்தும் நாக்கு
எந்தசுவை எதுவென்று தனித்தனியாய் சொல்லி
ஏற்கின்ற சுவையதனை எடுத்துண்ணும் நாக்கு
காரம்தான் உணவினிலே கனமாக இருந்தால்
கண்ணீரை வரவழைத்துக் காட்டுகின்ற நாக்கு
படித்திடவும் பேசிடவும் பாடிடவும் மாந்தர்
பல்வேறு மொழிகற்க அடிப்படையாம் நாக்கு
அன்றாடம் அருகிலுள்ள மக்கள்மீது குறையை
அள்ளிஅள்ளி வீசுகின்ற ஆயுதமாம் நாக்கு
நல்லவர்கள் மீதினிலும் பழிசொற்கள் சொல்லி
நட்புக்கும் எமனாகும் நலமழிக்கும் நாக்கு
கல்லாரும் கற்றாரும் எல்லோரும் உன்னை
காக்காமல் கெடுகின்றார் மண்ணுலகில் என்றும்
உள்ளிருந்து உமிழ்நீரில் உறவாடிக் கொண்டு
உள்ளத்தில் முள்தைத்தே உறங்கிடுமே நாக்கு
ஆறிவிடும் அங்கத்திலே தீசுட்டால் நெஞ்சில்
ஆறிடாத ரணம்தந்தே அலைக்கழிக்கும் நக்கு
எப்பொழுதும் முப்பொழுதும் நீருக்குள் மிதந்தும்
எப்படிதான் தருகின்றாய் சுடுசொல்லை நீயும்
நனிசுவையைத் தருகின்ற கனியிருக்கும் போதில்
நாற்றம்தரும் காயெடுத்து புசிக்கின்றாய் ஏனோ?
உண்கின்ற உணவதனை பல்மெல்லும் போதில்
உகந்தபடி மிகஎளிதாய் வளைந்துதவும் நாக்கே
இசைவாகப் பிறழ்கின்ற தன்மைஉள்ள தால்தான்
இன்றொன்றும் நேற்றொன்றும் பேசுகின்றாய் போலும்
சினம்மிகுந்த வேளையிலே கடும்சொற்கள் தந்தே
மனம்நோகச் செய்வதுவும் உன்செயலில் ஒன்றோ?
அன்புக்கும் அறிவுக்கும் உறுதுணையாய் நின்றே
அகமகிழச் செய்கின்ற நாக்கேஎன் நண்பன்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்