பள்ளியின் முதல் நாள்

துள்ளிக் குதித்த காலம் மாறி
ஒரு நாள் சேர்த்திடுவார் பள்ளியிலே
புது சட்டையிட்டு மிட்டாயைப் பையிலிட்டு
சொல்லும் போதே ஆர்ப்பரிக்கும் ஆனந்தம்
கண்ணிரண்டும் சுருங்கி கன்னமிரண்டும் விரியும்
புரியவில்லையோ? முகத்தில் சிரிப்புச் சிதறும்
இந்நாள் அனைவருக்கும் தீபாவளி தான்.

புத்தாடையிலே மினு மினுக்கும் மேனி
மிடுக்குத் தோற்றத்தில் வீறு நடை
போட்டுச் செல்லும்,அம்மாவோடு ஆனந்தமாய்
பள்ளியினுள் நுழைந்தவுடன் தாய் முகம்
பார்த்து சேய் சிரிக்கும் மெதுவாய்!
சேர்க்கை முடிந்து வகுப்புத் தேடி
செல்லத் தாய் கரம் பிடிக்கையிலே
உள்ளம் சிட்டுக் குருவியாய் பறபறக்கும்.

வகுப்பறை வாயில் சென்ற வேளை
ஆசை யோடு அணுகிடுவார் ஆசிரியர்
அறிமுகம் முடிந்த அடுத்த நொடி
ஆசிரியர் அழைப்பார் அவனை அன்பாக
அவர் முன்னிழுக்க தாயின் துகில்
பிடித்து அவன் பின்னி ழுப்பான்
தாய் இழுத்து முன்னிடுவாள். ஒருவழியே
பிஞ்சு மனம் பரிதவித்து உள்போகும்
கண்ணீர் முகம் தாண்டி வழிந்தோட

சேயது அமரும் வரையிலே வாயில்
காத்திடுவாள் தாயவள்.அத் தருணம்
ஒலித்திடுவார் ஆசிரியர் 'நீ செல்லம்மா
நான் பார்த்துக் கொள்கிறேன் செல்லமாய்’.
கடைப் பார்வை பார்த்து கண்கலங்கிடுவாள்
இடை விடாத பார்வை இருவருக்கும்
நிலைபெற வில்லை நீண்ட நொடி
மதிற்சுவர் சென்று மறைந்து விட்டாள்
சேயது கண்ணீர் கரை புரள.

எழுதியவர் : செல்வா.மு (15-Dec-15, 10:32 am)
பார்வை : 105

மேலே