காட்சிப் பிழைகள் - 7

எனது இரவுகளின் நீட்சிகளுக்கு
நீயே காரணம் ஆகிறாய்..

நிமிடங்களின் நேரத்தை நீட்டிக்கும் நீ..
மறந்தும் என் ஆயுளை நீட்டித்து விடாதே..

அதற்கான அவசியத்தை
நீ எப்போதோ அழித்து விட்டாய்! ..

காலத்திற்கே கெடு வைப்பவள்
நீ மட்டும்தான் !



ஒரே நேரத்தில் மலராகவும்
இதயம் கீறும் முள்ளாகவும்

உன்னால் மட்டுமே மாறி விட முடிகிறது....
மலராக இருக்கும் போது கூட
அமிலத்தை அல்லவா தேனுக்கு பதில் வைத்திருக்கிறாய்..!
அதனால் அமில மலர் என்றே நீ அறியப் படுகிறாய் !

******

என்னை இழந்தேன் உன்னிடத்தில்..அது நினைவில்லையோ..நிஜமில்லையோ..

உன்னை நினைத்தே தவமிருந்தேன்..உயிர் போகின்ற வரத்தை ஏன் கொடுத்தாய்..?

..

காதல் தீயை நீ வளர்த்தாய்..என் வாழ்க்கை அதனுள் பூத்ததடி

சாதல் கீதம் நான் இசைக்க.. பிரிவென்ற தீயை நீ ஏன் கொடுத்தாய்.?

..

எந்தன் உயிரை நரம்பாக்கி .. காதல் வீணையை நான் இசைத்திருந்தேன்..

உந்தன் உயிரில் கலந்த பின்னே .. கொடும் விஷத்தை எனக்கு ஏன் கொடுத்தாய் ? ..


மண்ணில் விழுந்த தாரகையே.. மனக் கோட்டையை இடித்த மென்காற்றே
விண்ணில் மறைந்த விடி வெள்ளியே எனக்கு ..விட்டில் பூச்சி ஆயுள் ஏன் கொடுத்தாய் ?



இன்ப அலைகளில் கால் நனைத்து.. என் அந்திகளை நான் செலவழித்தேன்

துன்ப ஆற்றினில் தள்ளி விட்டு..உடைந்த பரிசலை அதில் ஏன் கொடுத்தாய் ..

******

என் இதயத்தின் வாசலை
கண்ணீரால்தான் கழுவுகிறேன்..

அதில்..நீ ..போட்டுவிட்டு போன
சிக்குக் கோலம் மட்டும்
இன்னும் அழியாமலேயே இருக்கிறது..! ..

என்னை அழிப்பதற்கு
அதுவே போதுமானது!

..

உன் காதல் சாரலில் தகிக்கும்
நோய் கேட்டேன்..

பெருமழை பேரிடராய் மாறி..
ஒரு.. மரித்துப்போன புன்னகையை
நிவாரணப் பொட்டலமாய்
வீசி விட்டு போகிறாய்..

அதில் கூட உன் படத்தை ..
எதற்காக நீ ஒட்டி இருக்கிறாய்.!

******

நெஞ்சத்தில் இடம் கேட்டு வந்தவளே ..ஒரு நொடியினில் எப்படி எனை மறந்தாய்

மஞ்சத்தில் உறக்கம் மறந்தேனே .. என்னைக் கொல்லும் இரவுகள் ஏன் கொடுத்தாய்?


காதலின் முகவுரையை நீ எழுதி ..சோக முடிவுரை நீயே எழுதி விட்டாய்

புதினங்கள் படைத்திட பூஜை செய்தேன்.. நெருப்புப் பூக்களை நீ ஏன் கொடுத்தாய் ?



உன் நினைவுகளையே நான் போர்த்திக் கொண்டேன்..கதகதப்பாய் அன்று நீ இருந்தாய் ..

காட்சிப் பிழையென சொல்லி விட்டு .. கண்ணீர்த் தலையணை நீ ஏன் கொடுத்தாய்?



என் கார்மேகமே..நீ கலைந்து விட்டாய் ..வெறும் கானல் நீராய் மறைந்து விட்டாய்

உன் காதல் மழையை நான் கேட்டேன் ..பேரிடர் வெள்ளத்தை நீ ஏன் கொடுத்தாய் ?

..

இந்தக் கருணாவை கஜல் ஒன்றில் கனிய வைத்து..மோகனம் பாடிடவோ மறந்து சென்றாய்..

அபஸ்வரத்தினை சுருதியாய் கூட்டி விட்டு.. சோகத்தின் ராகத்தை நீ ஏன் கொடுத்தாய்..?

எழுதியவர் : கருணா (18-Dec-15, 1:11 am)
பார்வை : 672

மேலே