நீயெங்கே

எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!...
இதயம் கிழிந்திட...
உணர்வுகள் சிதைந்திட...
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!....
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!...
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!...
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்...!
இரவும் பகலும்
என்னை மட்டும்
விட்டுவிட்டு ஓடியபடி
கைகொட்டி சிரிக்கிறது...
நீக்கமற நிறைந்திருக்கும்
தனிமையினூடே
கரைந்து மறைகிறது
என்
கொஞ்சலும்...
கெஞ்சலும்...!
பேசாமல் நான்
அதையே
காதலித்து
தொலைத்திருக்கலாம்...!
கனநொடி தோன்றி
மறையும்
வானவில்லாய்
வந்துப் போனவளே...!
பழுதுப்பட்ட
வாகனத்தை நம்பி
பாரசீகம் போக விரும்பிய
மூடனது கதையானது
உன்னுடனான
என் நாட்கள்...!
நிலவையும் ரசிக்க
மறுக்கிறது
உன் வதனம் கண்ட
விழிகள்!
தொடர்புள்ளியென
கரங்கோர்த்து
தொடர்ந்துவர
ஏங்கியவனின்
எதிர்காலத்தையே
வினாக்குறியாக்கி
விடைப் பெற்றாயடி
பாவி...!
காதலெனும்
போர்வைதனில்
நீ தந்த
வலிகளையெல்லாம்
வரிகளாக்கிவிட்டேன்...!
கரும்பின் சாறென
காதல்
பிசைந்து தந்த
என் கவிதைகளை
நீ
என்ன செய்தாய்?!...
*********************

எழுதியவர் : Daniel Naveenraj (21-Dec-15, 5:28 pm)
பார்வை : 486

மேலே