7 ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி

அன்றைக்கு வெள்ளிக் கிழமை..,ஜும்மா தொழுகையை முடித்து,அனைவரும் வெளியேறிய பின்னர், வழக்கம்போல வந்து பள்ளிவாசல் வராந்தாவில் அமர்ந்த நாகூர் மீரான்,ஏதோவொரு புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டு படிக்க ஆயத்தமாகும்போது, வாசலில் நிழலாடியது.நிமிர்ந்தவர் கண்களில் முஸ்தபாவும்,யாகூப்பும் தெரிந்தார்கள்.

“வாங்க பாய்..ஏன் அங்கியே நின்னுட்டீங்க..?,தொழுகை முடிஞ்சு நீங்க உடனே வெளிய போனதும்,ஏதோ அவசர வேலைன்னு நெனச்சிட்டேன்..”

“இல்லே பாய்..உங்ககிட்டே ஒரு விஷயம் பேசணும்..,அதான் தொழுகை முடிஞ்சு நீங்க தனியா இருந்தாப் பேசலாமுன்னு வெளிய காத்துகிட்டு இருந்தோம்..” யாகூப் சொல்ல,

நாகூர் மீரான் “எங்கிட்டே பேசுறதுக்கு,நீங்க இதெல்லாம் பாக்கணுமா..? நீங்க எப்ப வேணும்னாலும் பேசலாமே..!”

முஸ்தபாவும்,யாகூப்பும், நாகூர் மீரானுக்கு முன்பாக விரிப்பில் அமர்ந்தனர்.

தன்னைப் பார்த்த,முஸ்தபாவின் பார்வையில் ஏதோவொரு தயக்கமும் சஞ்சலமும் இருப்பதாகப் பட்டது நாகூர் மீரானுக்கு.முஸ்தபா எதையோ சொல்லப் போகிறார்..என்பதற்காக யாகூப் காத்துக் கொண்டிருப்பதாகவும் பட்டது.

வழக்கத்திற்கு மாறான அவர்களின் செயல் நாகூர் மீரானுக்கு ஆச்சரியத்தை தந்தது. “முஸ்தபா பாய்..எதுவானாலும் சொல்லுங்க..,எங்கிட்டே பேசுறதுலே உங்களுக்கு என்ன தயக்கம்..,குடும்பத்துலே ஏதாவது பிரச்சினையா..? வீட்லே எல்லாரும் நல்லாருக்காங்கதானே..?” ஏதாவது ஒரு முனையிலிருந்து, அவர்கள் பேச்சினைத் துவக்குவதற்கு வசதியாக கேள்விகளைக் கேட்டார் நாகூர் மீரான்.

பேச்சைத் துவங்காமல்,இனியும் தயங்கிக் கொண்டிருப்பது, மரியாதையான விஷயமாக இருக்காது என்று உணர்ந்த முஸ்தபா, “ஹஜரத்..உங்களிடம் ஒரு நல்ல காரியத்தைப் பத்திப் பேசலாம்னுதான் நாங்க வந்தோம்..” பீடிகையோடு விழுந்தன வார்த்தைகள்.

நாகூர் மீரான், “நல்லதை எங்கேயும் பேசலாம், எப்போதும், எவரிடத்திலும் பேசலாம்.. நல்லதையெல்லாம் பேசும்போது,உங்களுக்கு அல்லாவும் துணையாய் நிற்பானே..நீங்க சொல்லுங்க பாய்..!”

“என் அண்ணன் பொண்ணாயிருந்தாலும்,இப்ப அவ என் மகள்தான்,மார்க்கப் படிப்பையும் மத்தவங்களுக்கு சொல்லித்தர்ற அளவுக்கு நல்லாப் படிச்சுருக்கா..இப்ப அவளுக்கு வயசு இருபத்திரெண்டாச்சு..,அவளுக்கு நிக்கா பண்ணி வெக்கலாமுன்னு நெனக்கிறோம்..”

“நல்ல விஷயம்தானே பாய்..செய்யுங்க நல்லா செய்யுங்க..”,நாகூர் மீரானின் குரலில் உண்மையான மகிழ்ச்சி ததும்பியது. தொடர்ந்து, “நான் என்னவெல்லாம் உதவி செய்யமுடியும்னு சொல்லுங்க.. இன்ஷா அல்லா,கூடவேயிருந்து எல்லாம் செஞ்சுர்றேன் பாய்..” அக்கறையாகவும் அவரின் குரல் தொனித்தது.

பாத்திமாவிற்கு,வேறு எங்கோ நிக்காவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என நினைத்து,நாகூர் மீரான் பேசிக் கொண்டிருப்பது புரிந்தவுடன்,முஸ்தபாவும்,யாகூப்பும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

முதலில் சுதாரித்துக் கொண்டவர் யாகூப்தான். “ஹஜரத்.., பாத்திமாவை உங்களுக்குத்தான் நிக்கா பண்ணிக் குடுக்கலாமுன்னு, முஸ்தபா நெனச்சுகிட்டு இருக்கார்..” அலங்கார பாவனைகள் எதுவுமின்றி பட்டென்று போட்டுடைத்தார் யாகூப்.

நாகூர் மீரான் இப்போது,அதிர்ச்சியடைவது துல்லியமாகத் தெரிந்தது.ஏதோ பேசக் கூடாத வார்த்தைகளை யாகூப் பேசிவிட்டதைப் போல,அவர் முகம் கலவரமடைந்தது.அதிர்ச்சி விலகாமல் அவர் முஸ்தபாவின் முகத்தைப் பார்த்தார். யாகூப் பேசியது தனக்கு உடன்பாடானதுதான் என்று தெரிவிக்கும் தோரணையுடன், முஸ்தபா இப்போது புன்சிரிப்போடு,பார்த்துக் கொண்டிருந்தார்.

“யாகூப் சொல்றது உண்மைதான்.நான் முழு சம்மதத்தோடத்தான் உங்ககிட்டே இதைப் பேச வந்தேன்..!” முஸ்தபா சொல்ல,இப்போது நாகூர் மீரான் குழப்பமடைந்தார்.அந்தக் குழப்பம் அவரை சில நிமிடங்கள் அமைதிக்குள் தள்ளிவிட்தது.

நீண்டு கொண்டே செல்லும் நாகூர் மீரானின் கனத்த அமைதியை,யாகூப்பினால் பொறுக்க முடியவில்லை. “ஹஜரத்.. உங்க பதிலைச் சொல்லவே இல்லை..! நாங்க சொன்னதுலே ஏதாவது தப்பு இருக்குன்னாலும்,நீங்க தாராளமாய் சொல்லுங்க..,”

அவரின் அமைதி இன்னும் கலைந்தபாடில்லை.

யாகூப் மேலும் தொடர்ந்தார். “முஸ்தபா பாயோட நிலைமை உங்களுக்குத் தெரியும். பொண்ணுக்கு நிக்கா வெச்சுட்டா..,கடனை வாங்காம அவராலே பெரிசா ஒண்ணும் செஞ்சுற முடியாது. அப்படியே பண்ணி வெச்சாலும்,பொண்ணோட வாழ்க்கை நல்லபடியா அமையுமா இல்லையான்னு அல்லாவைத் தவிர யாருக்கும் தெரியாது. ஆனா..,உங்களைப் பத்தி,இந்த ஊருக்கே தெரியும்.உங்களுக்கு நிக்கா பண்ணிவெச்சா..முஸ்தபா பாய்க்கு மட்டுமில்லே, இன்ஷா அல்லா..அந்தப் பொண்ணுக்கும் எந்த கஷ்டமும் வராதுன்னு நாங்க உறுதியா நம்புறோம் பாய்..,”

யாகூப் பேசிக் கொண்டிருக்கும்போது,முஸ்தபா எங்கேயும் குறுக்கிடவில்லை.அமைதியாக அவர் நாகூர் மீரானையே பார்த்துக் கொண்டிருந்தார். நாகூர் மீரானுக்கு, அதுவே மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.அநாதையாக,அகதியாக வந்த எனக்கு,மீண்டும் மறுவாழ்வு தந்து உதவிய மனிதர், தனக்கென இதுவரை எதையாவது செய்து தர முடியுமாவெனக் கேட்காதவர்.இன்றைக்கு தனது மகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறார்.ஒருவகையில் இப்போது எனது நன்றியை ஒரு செயலின் மூலம் தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பம்..,ஆனால்,அதில் ஒரு இளம்பெண்ணின் வாழ்வையும் இணைக்கவேண்டுமா..? நாகூர்மீரானுக்கு அது ஒன்றுதான் மிகவும் உறுத்தலாக இருந்தது.

அதற்காகத் தயங்கும் என்னை,வேறு ஏதாவது தவறாக முஸ்தபா நினைத்துக் கொள்ளக் கூடாதே..!,இனியும் பதிலேதும் சொல்லாமல் காலம் தாழ்த்தினால், அதற்கான சந்தர்ப்பமும் உருவாகிவிடுமோ.. என்ற அச்சம் அவர் மனதைக் கவ்விப் பிடித்த நொடியில், முஸ்தபாவின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டார் நாகூர் மீரான்.

நாகூர் மீரானின் அந்தச் செய்கை,முஸ்தபாவிற்கு பெரிதும் ஆறுதலாய் இருந்தது.இனி அவர் நல்ல முடிவைத்தான் சொல்லப் போகிறார் என்ற நம்பிக்கையையும் மனதில் விதைத்தது. யாகூப்பின் முகத்திலும் மகிழ்ச்சியுடனான சிரிப்பு பரவியது.

நாகூர் மீரான், “பாய்..ஆண்டவன் விருப்பமில்லாம,நீங்க வந்து எங்கிட்ட இந்த விஷயத்தை பேசியிருக்க முடியாதுன்னு நம்புறேன்.இந்த விஷயம் அந்தப் பொண்ணுக்குத் தெரியுமா..?”

யாகூப்பும்,முஸ்தபாவும் சேர்ந்தாற்போல மறுத்து தலையாட்டினர். “அவளுக்கு தெரியாது.”

“அப்படித்தானிருக்கும்னு நெனச்சேன்.எனக்கு நிக்கா பண்ணிக்க சம்மதம்தான் பாய்.., ஆனா,அந்தப் பொண்ணு தன்னோட நிக்கா பத்தி மனசுக்குள்ள என்ன நெனச்சிருக்குன்னு நமக்குத் தெரியாது.நாப்பது வயசு கடந்துட்ட என்னை,நிக்கா பண்ணிகிட்ட பின்னாடி, தன்னோட விதி இப்படியாயிருச்சுன்னு நொந்துக்கக் கூடாது.தாய் தகப்பனில்லாத அவளை, நாமெல்லாம் சேர்ந்து கட்டாயப் படுத்திட்டோம்னோ,வேற கதி இல்லாததாலே தனக்கு இதுதான் விதிச்சிருக்குன்னோ அவள் சங்கடப்பட்டுறக் கூடாது பாய்.அப்படியொரு நிலைமை உண்டாயிடுச்சுன்னா, ஆண்டவனுக்கு நான் பாவியாகிப் போயிருவேன். அதனாலே, பாத்திமாவோட சம்மதத்தை முதல்லே தெரிஞ்சுக்கங்க..!” நாகூர்மீரான் தனது நிலையை முழுதாகச் சொல்லி முடித்தார்.

யாகூப்பிற்கும்,முஸ்தபாவிற்கும் அந்த பதில் மிகவும் திருப்தியாக இருந்தது. மேலும், முன்னர் தாங்கள் பேசிக் கொண்டபடியே, நாகூர்மீரானின் எண்ணமும் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

‘இஸ்லாத்திற்கு விரோதமான பிரம்மச்சரியம்,துறவரம்..தவிர்த்து இந்த மீரானுக்கு மணம் முடிக்க ஒரு சந்தர்ப்பத்தை, அல்லா நிச்சயம் பண்ணிவிட்டானா..?. இன்ஷா அல்லா..அவனுடைய விருப்பம் அதுவாயிருந்தால்,அப்படியே ஆகட்டும்.! நாகூர் மீரான் மனதுக்குள் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்.ஜம்ஜம் கிணற்றின் குளிர்ந்த நீர்,திடீரென்று உடலையெல்லாம் நனைப்பது போலிருந்தது.

முஸ்தபா,இரவு உணவை உண்டபின், வாசலில் கிடந்த கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டு, “இந்தா..” என்றழைத்த குரலுக்கு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த உசேன் பீவியிடம், “பாஷாவையும்,ஜீனத்தையும் வரச்சொல்லு..” என்றார்.

மூவரும் வந்து திண்ணையில் அமர்ந்தனர். “நம்ம பாத்திமாவுக்கு நிக்கா பண்ணி வெச்சுடலாம்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.”

“யோசிக்கறதுக்கு என்ன இருக்கு..நல்லபடியா எல்லாம் அமைஞ்சா நிக்காவை முடிச்சுற வேண்டியதுதானே..?”

பாஷா, “சரிதான் வாப்பா..,தங்கச்சிக்கு ஏதாவது மாப்பிள்ளை பாத்துவெச்சுருக்கீங்களா..?”

மூவரையும் பொதுவாகப் பார்த்த முஸ்தபா, “நம்ம ஹஜரத்துக்குத்தான் பாத்திமாவைக் குடுக்கலாம்னு நெனச்சிருக்கேன்..”

உசேன் பீவியும்,ஜீனத்தும் லேசாக அதிர்ந்தார்கள்.பாஷாவும் பதட்டமானான்.“என்ன வாப்பா.. நீங்க.., ஹஜரத்துக்கும், பாத்திமாவுக்கும் வயசு வித்தியாசம் அதிகமா இருக்குமே.. இது சரியா வருமா..?”

“எல்லாம் சரியா வரும்..” என்று சொன்ன முஸ்தபா,நாகூர் மீரானிடம் யாகூப்பும்,தானும் பேசியவற்றையும், பாத்திமாவின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு கிடைக்கும் உத்தரவாதத்தையும் எடுத்துக் கூற,மூவரும் இப்போது உடன்பட்டனர்.

பாத்திமாவோட சம்மதத்தையும் தெரிஞ்சுகிட்டா,அடுத்த ஏற்பாட்டைப் பாக்கலாம். “இந்தா..பாத்திமாவை இங்க கூப்பிடு..”

உசேன் பீவி அழைத்ததைத் தொடர்ந்து,வெளியே வந்த பாத்திமாவை அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்டாள் ஜீனத்.

“பாத்திமா..உனக்கு நிக்கா செய்துவைக்கலாம்னுதான் நாங்க எல்லாம் பேசிகிட்டுருக்கோம்..” முஸ்தபாதான் பேச்சைத் துவக்கினார்.

பாத்திமா சிரித்தாள்.அது வெட்கப்பட்டு சிரிப்பதைப் போலத் தெரியவில்லை.விரக்தியில் சிரிப்பதாகத் தெரிந்தது.

“ஏம்மா..சிரிக்கிறே..?” பாஷா கேட்டான்.

“ஒண்ணுமில்லை..கூடப் பொறந்த அண்ணன்களே அக்கறை எடுத்துக்காத விஷயத்தை, எனக்கு ஆதரவும்,அடைக்கலமும் குடுத்த நீங்கெல்லாம் சொல்லும்போது ஒரு பக்கம் சந்தோஷமா இருக்குது.அதே சமயம் எனக்காக நீங்க சொல்ற காரியத்துனாலே உண்டாகப் போற கஷ்டத்தை நெனச்சா மனசுக்கு சங்கடமாவும் இருக்கு..”

முஸ்தபா பதறினார்.. “அய்யய்ய..இதென்ன இப்படிப் பேசறே.. நாங்கெல்லாம் உனக்கு சொந்தமில்லையா..? நீ எனக்கு அண்ணன் மகளா இருந்தாலும்,எனக்கும் மகதானே..? உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்குறது எங்க கடமையில்லையா..?

“கூடப் பொறக்காட்டியும் நான் உன்னோட அண்ணன்னு நெனக்கிறியா..இல்லையா..?” பாஷாவும் தன் பங்குக்கு கேட்டுவிட்டான்.

“நீ எதுக்கும் கவலைப் படவேண்டியதில்லே பாத்திமா..உன்னோட நன்மையிலே எங்களுக்கும் பங்குண்டு..” அண்ணி ஜீனத் சொல்ல,பாத்திமாவின் கண்கள் பணித்தன.

“அப்ப உனக்கு நிக்கா பண்ணிக்க இஷ்டம்தானே..?” முஸ்தபா கேட்க,பாத்திமா மையமாகத் தலையாட்டினாள்.

“நம்ம பள்ளிவாசல் ஹஜரத்துக்குத்தான் உன்னைக் கட்டிக் குடுக்கலாம்னு எல்லாரும் பேசி வெச்சிருக்கோம்.நல்ல மனுஷன்..!” முஸ்தபா சொல்ல,அவர் எப்படியிருப்பார்..என்று பாத்திமாவின் மனதிற்குள் ஒரு சித்திரம் ஓடியது.

தான் இங்கு வந்தது முதல்,இதுவரை அவர் இந்த வீட்டிற்கு வந்ததாக நினைவில்லை. இருந்தாலும் குடும்பத்து பெரியவர்கள் எல்லாம் இணைந்து எடுத்த முடிவில் பழுதிருக்க முடியாது.பாத்திமா உறுதியாக நம்பினாள். மேலும்,வழக்கமாய் நிக்கா செய்துவைக்கும் போது, மணப்பெண்ணிடம் பெற்றோர் உட்பட யாரும் ஆலோசனை கேட்பதில்லை. அவர்களின் முடிவையே,அவள்மீது ஏற்றிவைப்பார்கள். அது சுமையாகவோ,சுகமாகவோ இருப்பதென்பது,அவளது அதிர்ஷ்டம்..என்றே,மற்ற பெண்களின் அனுபவத்திலிருந்து இதுவரை உணர்ந்திருந்த பாத்திமாவிற்கு,தனது நிக்கா குறித்து தன்னிடம் இவர்கள் அபிப்ராயம் கேட்டது மிகப் பெரிய விஷயமாகத்தான் பட்டது.

--------- தொடரும்


வாசகர்களின் புரிதலுக்காக -- ஜம்ஜம் கிணறு-= புனிதத் தலமான மெக்காவில் உள்ள கிணறு.
=========================

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (23-Dec-15, 8:28 pm)
பார்வை : 144

மேலே