என் கண்ணீர் துளிகள்

சின்னஞ்சிறு நந்தவனத்தில்
சிறகடித்த சிட்டுக்குருவியே
காலனெனும் கல்நெஞ்சனின்
கண்பட்டு உயிர் நீத்தாயே!

பிழையாய் கற்பித்தேனோ பிள்ளையே
பின் சுவாசிக்கச் சொன்ன காற்றை
ஏன் நேசித்து அதில் கலந்தாய்?
பின் ஏன் சுவாசிக்க மறந்தாய்?

வழி மறந்து நீ சென்றிருந்தால்
வருவாயென நான் காத்திருப்பேன்
உன் ஒருவழிப் பயணத்தில்
உண்டோ சொல் மீளும் வழி?

அறிவாலே நீ பெற்ற பதக்கத்தை
அணிவிக்கத்தானே நான் காத்திருந்தேன்
மகுடம் வேண்டாமென நினைத்தாயோ?
மலர் வளையம் வைத்திடச் செய்தாயோ?

பெற்றவன் மடிதனிலே பெற்ற சுகம்
போதுமென எண்ணித்தான் போனாயோ?
படைத்தவன் பாதத்தில் தலை சாய்த்து
படுத்துறங்க இறைவனடி சேர்ந்தாயோ?

இழப்பின் வலிதனை உணரச்செய்தாய்
இதயத்தை சருகாய் நொறுங்கச்செய்தாய்
இனிவேண்டாம் இது போன்ற பேரிழப்பு
இறைவனிடம் உள்ள நீ எனக்காக வேண்டு!

பாசத்துடன் உன் ஆசிரியன்

குறிப்பு : எனது 9 வயது மாணவி விபத்து ஒன்றில் சமீபத்தில் இறந்து போனாள். எங்கள் அனைவரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்திச் சென்ற அவளுக்காக எழுதிய அஞ்சலி கவிதை இது.

எழுதியவர் : இரா. கோபிநாத் (26-Dec-15, 8:34 pm)
Tanglish : en kanneer thulikal
பார்வை : 2162

மேலே