-சுய சரிதை எழுதலாமா---------வசன கவிதை

சுயசரிதை எழுத எண்ணம் வந்தது..
உடனே எழுந்த தலைப்புகள்
'அவளை'க் காணுமுன்,
'அவளை'க் கண்ட பின் என்பதே!
'அவளை'க் காணும் முன் என்பதற்கு
என்னைத் தேட வேண்டி வந்தது..
'அவளை'க் கண்ட பின் என்றெழுத யோசித்தேன்
அவளே எல்லாமுமாகத் தெரிந்தது
என்னைக் காணவில்லை..

பள்ளி அனுப்பவங்களைப்
பகிர்ந்திட எண்ணினேன்..
துள்ளி முன் தோன்றியதோ
பாடம் எடுத்தபடி
அவளது கண்கள்
இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன்
என்ன எழுதப் போகிறேன்..

அவளைப் பற்றியே எழுதிவிடலாம்
என்ற எண்ணம் எழுந்தது ..
அவளும் முகம்
ஆகாயமாக விரிந்து நின்றது..
அதை முழுதுமாகப்
பார்க்கவோ, படிக்கவோ
புரியவோ முடியவில்லை ..
திகைத்து நின்றுவிட்டேன்..
தோட்டமும், பூக்களும்
தொடர்ந்தோடும் அருவியும் மலையும்
படர்ந்தது கண்முன்
ஒளிப்படமாய்..
ஏங்குபவனாக,
எதற்காக நிற்கிறேன் என்பது புரியாதவனாக,
என்ன செய்வது என்று புரியாதவனாக
அவளைப் பற்றிய
எண்ணக் குளிர்ச்சியில்
வண்ண நினைப்புகளில்
அதன் மணத்தில்
என்னை இழந்தேன் ...
யாராவது உதவுங்களேன்..

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Jan-16, 9:58 pm)
பார்வை : 67

மேலே