ஜல்லிக்கட்டு - எம் களம்

தோல்வியெனில்
ஒரு திமிரலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!!

வெற்றியெனில்
திமில் பிடித்தலுக்கும்,
மண்டியிடச்செய்தலுக்கும் அல்லது எல்லைக்கோடு அடைதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் பயணம்
எம் களம்!!!

களமாடிக் களைக்கும்போது
கூட்டத்தின் கூச்சல்கள்
எமக்கு உற்சாகம்...
காளைக்கு மிரட்சி...

காடிவாசல் புறப்படும்
கொம்பு சீவிய
குடிகார காளையை
வால்பிடித்தோ இல்லை திமில்பிடித்தோ
தூக்கியெறியப்படும் வேளைகளில்
பரணிலிருக்கும் காளைக்காரனின்
வெடிச்சிரிப்பிலும் மீசை முறுக்களிலும்
வெளிப்படும் அவன் வெற்றி...

மாறாக
பற்கள் கடித்தலிலும் கொச்சயாய் ஏசுதலிலும்
வெளிப்படும் எம் வெற்றி...

பாவம் காளைகள்
மீசை முறுக்கலில் அதற்கு வெற்றியுமில்லை...
கொச்சை வார்த்தை ஏசலில் தோல்வியுமில்லை..

இக்கதி முடிவில்
யாம் பெற்ற சன்மானம்
இரண்டாயிரம் ரூபாய்...

கோடித்துணி
வாய்க்கரிசி
மேலும் சில சேர்த்து
எம் மாமன்
எமக்கெனச் செய்த செலவு மூவாயிரம் ரூபாய்...!!!

எழுதியவர் : ஜெயசீலன் (11-Jan-16, 2:16 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 7268

மேலே