இளம் தளிரே தமிழ் பேசு
கண்ணே மணியே கற்கண்டே
கருவில் நான் சுமந்த பொன்வண்டே
குழலையும் யாழையும் தோற்கடிக்கும்
மழலை பேசும் இசை அமுதே
அழகிய ஆங்கில வசனங்கள்
அற்புதமாய் அரங்கேறும் உன் நாவில்
செந்தமிழ் சொல் வாசகங்கள்
செழுமையாய் ஒலிப்பதே என் ஆசை
மொழிகள் அத்தனையிலும் இனிதென
முண்டாசுக்கவி மார்தட்டிய செம்மொழி!
முத்து முத்தாய் ஐம்பெரும்காப்பியங்கள்
மணி ஆரமாய் அலங்கரிக்கும் பொன்மொழி!
தொல்காப்பியம் தேவாரம் திருவாசகமும்
தேடிக் கிடைக்காத அரும்பெரும் புதையல்கள்
தெய்வப்புலவரின் கடுகளவு திருக்குறளில்
தேங்கிக் கிடக்கிறது கடலளவு தத்துவங்கள்
அமுதத் தமிழின் பெருமையை
அடுக்கிட ஆயிரம் வார்த்தைகள் போதாது
அன்னைத் தமிழை அழியாமல் காத்திட
அழகிய தமிழ் மகனே(ளே) தமிழ் பயில்க
இளைய தலைமுறை அரும்புகள்
இன்பத் தமிழை மறவாது போற்றினால்
இன்னும் பல்லாயிரம் நூற்றாண்டுகள்
இளமையுடன் வளம்வருவாள் தமிழ்த்தாய் !!