காட்சிப்பிழைகள்-40 வே புனிதா வேளாங்கண்ணி

வாசலில் புள்ளி வைத்துப்போட்டேன் ஒரு சிக்கு கோலம்
உன்னிலிருந்து தள்ளி வைத்த‌தாலே உடைந்தது வாழ்க்கைப் பாலம்

என் கடிதத்தை வெற்றுக்காகிதம் தானேயென்று காற்றில் விட்டாயே
உன் பார்வைபடுமென்று காத்திருந்த எழுத்துக்கள் கதறிய‌ழுததைக் கண்டாயா

அத்தைமகள் எனை வந்து கோளைப் போலச் சுற்றினாய்
சொத்து கொஞ்சம் சேர்ந்தவுடன் தேளைப் போலக் கொட்டினாய்

நீ என் வீட்டில் அன்று வைத்தாய் டிசம்பர்பூ
இன்று எனைக்கண்டதுமே ஏளனமாய் சிரித்து இழுக்குதைய்யா வம்பு

மழை நாளில் தான் எனது காதலைச் சொன்னேன்
அதே போன்றொரு பெருமழையில் தான் நீயதைக் கொன்றாய்

உன் கல்யாணப்பத்திரிக்கைக்கு மஞ்சள்வைக்க எனைத்தேடி வீடு வந்தாயே
நம் கல்யாணத்திற்கான மஞ்சள்தாலி உடன்கட்டை ஏறியதை கவனித்தாயா

இந்நாட்களில் ஞாபகமறதி எனை முழுதாய் முற்றுகை இட்டுள்ளது
உன் நினைவுகளை மட்டுமே வீழ்த்தி வென்றிட மறுக்கிறது

அன்பை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன் மனதில் குத்தினாய் முள்ளாய்
உன்மேல் பழி வேண்டாமென்று என்னெஞ்சை ஆக்கினேன் கல்லாய்

உள்ளே புகுந்த ஞாபகங்களை அகற்ற முடியாமல் வாடுகிறேன்
வெளியே சுற்றும் நேரமெல்லாம் உன்ஜாடையை ஏனோ தேடுகிறேன்

உள்ளேன் உயிரில்லா வெற்றுடலாய்... அலைகளே இல்லா வெறுங்கடலாய்...
எழுதுகிறேன் கவிதையாய்... நிலவும் நட்சத்திரமும் புகமுடியா வெறுமையாய்...

அன்று உன் விழிகளை மொழிபெயர்த்து நூலாக்கி வைத்திருந்தேன்
இன்று அந்த மொழியையே மறந்துவிட்டு தூளாகி வாழ்ந்திருக்கேன்

நாம் சுற்றித்திரிந்த ஒற்றையடிப்பாதை இன்று மறைந்து போயிருச்சே...
வயல்வெளியும் வரப்பும் வாழ்வைப் போல மயானம் ஆயிருச்சே..

ஆடித்திரிந்த ஆலமர விழுதெல்லாம் இன்று மண்ணுக்குள் புதைஞ்சிருச்சே..
பாடிப்பறக்கும் ஆத்தமர குயிலெல்லாம் இன்று சோககீதம் இசைச்சிருக்கே...

மருதாணி வச்ச கைகள் வெளுத்துப் போய் இருக்கிறதே..
அருக்காணி போல கூந்தல் அழுக்காய் போய் கிடக்கிறதே..

கஸலை முடிக்கும் நேரத்தில் ஏனோ அழுது இருக்கின்றேன்...
அருகில் நிற்கும் என்னவரோ தலையில் த‌ட்ட நிமிர்கின்றேன்...

(இத்தொடரில் எழுத வாய்ப்பு தந்த தோழமை ஜின்னா அவர்களுக்கு நன்றி)

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (20-Jan-16, 6:02 am)
பார்வை : 494

மேலே