அவள் அவளாக
தினமும்
நேர் வகுடெடுத்து
ரெட்டை ஜடையில்
கருப்பு ரிப்பன் கட்டி
நெற்றியில் செந்தூரத்தோடு வந்தாள்...
இலக்கண குறிப்பிற்கும் புணர்ச்சி விதிகளுக்குமே
நான் விழிப்பிதுங்கி நிற்க்கும்போது
டைரக்ட் & இன்டைரக்ட் ஸ்பீச்
எளிமையாக சொல்லித் தந்தாள்...
டிஃபரென்ஷியல் கால்குலஸின் கொக்கியில்
நான் தொங்கிய போது
என் ரெக்காடில்
ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்
நான் கேட்காமலே
வரைந்து கொடுத்தாள்...
வேதிச் சமன்பாடுகளை
நான் மனப்பாடம் செய்தபோது
தனிம அட்டவணையும்
வேதிச் சமநிலையும்
கற்று கொடுத்தாள்...
ராமன் விளைவுகளே
விளங்காமல் இருந்தபோது
ஸ்பேக்ட்ரோமீட்டர்
சொல்லிக்கொடுத்தாள்...
அதிலிருக்கும் குவியத்தில்
அவள் முகமே பிரதிபலித்தது...
பிறகொரு நாள்
பொது தேர்வு முடிந்ததும்
என்னைப் பிரிந்தாள்...
எங்கோ எப்பொழுதோ
டைரக்ட் & இன்டைரக்ட் ஸ்பீச்
ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்
தனிம அட்டவணை
ஸ்பேக்ட்ரோமீட்டர்
இவையெல்லாம்
எதார்த்தமாக கேட்கையில்...
இன்னமும்
நேர் வகுடெடுத்து
ரெட்டை ஜடையில்
கருப்பு ரிப்பன் கட்டி
நெற்றியில் செந்தூரத்தோடு
அவள் அவளாகவே
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
இவை அனைத்திலும்...