காட்சிப்பிழைகள்-50-பொள்ளாச்சி அபி

பெண்ணுடல் என்பது நுகரும் பொருளா
பெண்மனம் எனக்குண்டு –உன் மனம் இருளா.?

காலடி மிதிக்க கல்லாய் படைத்தாய்
அகலிகையென்றே பெயரைக் கொடுத்தாய்
எவனோ செய்த பாவத்தின் பலனை
எனக்கே அளித்தாய் ஏனிந்த வஞ்சனை..?

பிச்சை கேட்க நீயே வந்தாய்
இச்சை கொண்டு எனையே கவர்ந்தாய்.
பதினாலா ண்டுகள் தவித்திட வைத்தாய்
பின்னும் ஏனெனை தீக்குள் பணித்தாய்..?

என்னை வைத்தே பகடை உருட்டினாய்
கண்களை மூடி தருமத்தை விரட்டினாய்
சபையின் நடுவே ஆடையைப் பறித்தாய்
மானம் இழந்தபின் அவதாரம் எடுத்தாய்..!

ஆசைகள் நிறைந்திட அளவின்றி அலைந்தாய்
அவயம் முழுவதும் அழுகிட நைந்தாய்
பாடையில் செல்லும் நிலை வந்துமுனக்கு
கூடையில் சுமக்க கட்டளை எனக்கு..?

வாலிபம் தளர்ந்த வயதிலும் மணமுனக்கு
வயதே வாராத நிலையில் மணமெனக்கு
காலன் உனையழைக்க போகுதுன் கட்டை
கன்னியவள் எனக்கு எதற்கு உடன்கட்டை.?

வரலாற்றோடு உன் மடமை முடியவில்லை
நிகழ்காலத்திலும் உன் கடமை நினைவிலில்லை
இன்னுமெனை சிதைக்க காரணம் தேடுகிறாய்.
ஆடை அலங்காரமென குற்றம் சாட்டுகிறாய்.!

ஊதியமற்ற அடிமைகளாகப் படைத்ததா இயற்கை
இறைவனின் பெயரால் மாற்றியதுன் செயற்கை..
இல்லறம் என்பது இருவருக்கான நல்லறம்
இவளை அடக்கி ஆள்வதா உன்மறம்.?

தாய்முகம் பார்த்தும் தங்கைமுகம் பார்த்தும்
கிளராத காமம் பெருகாத மோகம்
சந்தியா காலத்து “இந்தியாவின் மகளெனில்”
சரித்திரம் இகழும் “பீப்”புகள் ஏனோ..?

அறங்கள் பாடிட ஆயிரம் வேதங்கள்
இருந்தும் ஏனோ நிகழுது பேதங்கள்..
பழமையின் மடமையில் இருந்தது போதும்
புதுமையின் கேள்விகள் புதிதாய் பிறக்கட்டும்.!

காட்சிப் பிழைகளாய் எண்ணிய கவிதைகள்
காட்சிப் பேழைகள்.., காலத்தின் விதைகள்..!
பிழைகள் என்பது காட்சியில் இல்லை
கண்ணில், மனதில் என்பதால் தொல்லை..!
============
ஒரு தகவலுக்காக-காட்சிப் பிழைகள் 51,52 தலைப்பில் மேலும் இரு கவிதைகள் பதிவு செய்துள்ளேன் நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.ஒரு பாடலை கேட்கலாம்
--அன்புடன்
பொள்ளாச்சி அபி.-30.01.2016

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (30-Jan-16, 12:21 am)
பார்வை : 401

மேலே