ஒருசொல் கவிதை
தென்றலின்
முதுகில் ஏறிக்கொண்டு
நாசி தொடும்
பூ வாசம் போல்
உன் பெயரை
உப்பு மூட்டை சுமந்து கொண்டு
என் கவிதை ஒன்று
வெளிவர விரும்பினேன்.
ஒருசில இரவுகள்
உறக்கம் விரட்டி
உயிரையெல்லாம்
ஒன்று திரட்டி
எழுதி அனுப்பினேன்.
கடைசியில் ...
அந்தப் பாழாய்ப்போன
பத்திரிக்கை
உன் "பெயரை" மட்டுமே பிரசுரித்திருந்தது
கவிதைப் பக்கத்தில்!
.
.