காமராசர்

நீ
காமராசு என
எழுத்துப் பிழையுடன்
உச்சரிக்கப்பட்ட
கர்மராசு.
வெளிச்சமென்பதை
விளக்கப் படுத்திய
கறுப்புச் சூரியன் .
ஏழைகளின்
வியர்வை துடைக்க
இதயத்தை
"துண்டாய்"த் தந்தவன்
இல்லை... இல்லை...
முழுமையாய் தந்தவன்
ஆண்டவனுக்கு தெரிந்ததெல்லாம்
மனிதர்களை
உருவாக்குவதுதான்
ஆனால் நீயோ
ஆண்டவர்களையே
உருவாக்கிய ஆண்டவன் .
அரச மொழி
ஆட்சி மொழிஎன
ஆயிரம் பிரிவினைக்கிடையே
பாமர மொழியையே
பாரத மொழியாக்கியவன்
உறுதி மொழி கொடுத்தும்
செய்யாமல்
தட்டிக்கழிப்போரிடையே
"பார்க்கலாம்னேன் " என்பதையே
உறுதி மொழியாக்கியவன்
அறியாமைப் பிரளயத்தில்
அவதிப்பட்டோரிடையே
கல்விப் படகேறி வந்த
கல்கி அவதாரம் நீ
செவிக்குணவில்லாதபோது
சிறிது வயிற்றுக்கும்......
என்றிருந்த வள்ளுவத்தை
செவிக்குணவோடு
நிறைய வயிற்றிற்குமென...
மாற்றி எழுதிய மாமேதை
அடுத்த தெரு வெள்ளத்தை
பார்க்கவே
ஆகாய பவனி வரும்
அரசியலில்
கால் நடையாக நடந்தே
காலம் வென்றவன் நீ .
உடன்பிறவாச் சகோதரிக்கே
உல்லாச வாழ்க்கையும்
ஊழல் சொத்தும்
சேர்க்கும் காலத்தில்
பெற்ற தாயேயானாலும்
வயதான காலத்திலும்-
"பொதுக் குழாயில்தான்
நீர்பிடிக்கணும்" என்ற
கலியுகத்தின்
கருப்பு மனுநீதி
நீ மட்டும் தான்
கந்தலிலும்
கிரீடம் செய்யும்
கலை சொன்னவன்
"மனு" எழுத வந்த
காங்கிரசை
விடுதலை விடியல் எனும்
விதி எழுத வைத்தவன்
பதவியைப் பிடிக்க
பன்னூறு திட்டமிடும்
அரசியலில்
பதவி விலகவென
திட்டம் தந்த
தியாகம் நீ...
உன்னை, நான்
கறுப்புக் காந்தி எனச்
சொல்லமாட்டேன்
மற்றவர்கள் வேண்டுமானால்
காந்தியை
வெள்ளை காமரசுஎன
சொல்லிக்கொள்ளட்டும் .
ஏனென்றால்
நீமட்டும் தான்
வாழ்ந்தவரை விருட்சமாயும்
வீழ்ந்த போதும்
விதையாயும் இருந்தவன்