ஏழ்மையின் எதிர்பார்ப்பு

தோளில் பையை மாட்டிக் கொண்டு
தோழ ரெல்லாம் பள்ளிச் செல்ல
தோளில் கல்லை சுமந்துச் சென்று
தோலும் கசிய வேலை செய்தேன் !

சுற்ற மென்று சொல்லிக் கொள்ள
உற்ற துணையாய் யாரு மில்லை
பெற்ற தந்தை போன பின்னே
பற்று மில்லை என்றன் வாழ்வில் !

துள்ளும் வயதில் துவண்டு போன
பிள்ளை மனத்தை அறிவார் இல்லை
கள்ள மின்றி கடமை செயினும்
முள்ளாய்த் தைப்பர் வார்த்தை யாலே !

ஏழை யாகப் பிறந்து விட்டேன்
ஏட்டுக் கல்வி கிடைக்க வில்லை
ஏற்றம் வாழ்வில் வருமோ வென்று
ஏக்க முடனே வழியைப் பார்த்தேன் !

அடுத்த பிறவி வாய்க்கு மென்றால்
தடுப்பாய் ஏழ்மை என்ற சாபம்
கொடுப்பாய் இறைவா கல்விச் செல்வம்
மடுப்பாய் செவியை இறைஞ்சு கின்றேன் ....!!!

( இன்றைய தினமணி கவிதைமணியில் வெளிவந்தது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Feb-16, 10:34 am)
பார்வை : 208

மேலே