ஒரு கனவும் சில யாசகங்களும்-சுஜய் ரகு

காலையில் வாசலில்
வந்து நின்ற பூம்பூம் மாடு
தலை சிலுப்ப
கனவு சிலிர்த்தது அன்றிரவு

கிழவியொருத்தி
சில்லறையை எண்ணிக் கொண்டிருந்த
நிழல்
மெள்ளப் படர்ந்தது பனியினூடே

பாலின மாற்றத்தின் வனாந்தரம்
தன் ஒருவழிப்பாதையில்
இருள் படர்த்துகிறது

புலம் பெயர்ந்த
இளம் பெண்கள் இறைஞ்சுகிறார்கள்
இரவோடும்
மின்தறிச் சப்தமென

கூடற்ற பறவைகளின்
அந்தி ஓலமாய் விழுகிறது
யாசகங்களின் கெஞ்சல் ஒலி

அழுக்குச் சொக்காவை
யாரோ கொடிக்கம்பத்தில் ஏற்றிவிட
அது காற்றில் பறக்கிறது

நான் விடிகாலையை
நெருங்கிக் கொண்டிருக்கிறேன்....

உடன் வா
என் மகா யுகமே.....!!

எழுதியவர் : சுஜய் ரகு (6-Mar-16, 5:27 pm)
பார்வை : 77

மேலே