தொடரும் சூப்பர் பதிவர்கள்

மரியாதைக்குரிய முத்து நிலவன் ஐயா பிரபலங்கள் மற்றும் புதியவர்கள் என பதிவர்களை அறிமுகம் செய்து... அறிமுகம் என்பதைவிட, மிகச் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்து நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்துக்காரர்களைப் பகிருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார். அதில் என்னையும் இழுத்து விட்டிருந்தார். நிஷா அக்கா அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் என்னையும் சொல்லியிருந்தார். இந்த தொடர்பதிவு பலரால் எழுதப்பட்டு நாம் வாசிக்கும் பலரையும் அறிமுகம் செய்து விட்டார்கள்.

ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட எழுத்துக்காரர்களை வாசிக்கிறேன்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புப் பெற்றவர்கள்.. ஒருவர் அழகிய தமிழில் அசத்தினால் மற்றொருவர் அசரடிக்கும் எழுத்து நடையில் கவர்வார்... ஒருவர் கவிதையில் கலக்கினால் இன்னொருவரோ கதையில் வாழ்வார்... ஒருவர் இலக்கியம் பேசுவாரென்றால் மற்றொருவர் இலக்கணம் பேசுவார்... ஒருவர் நகைச்சுவையில் நம்மை ஈர்த்தால் மற்றொருவரோ சோகத்தில் அசரடிப்பார்... இப்படியாக.. நிறைய... நிறைய வித்தியாசமான எழுத்துக்காரர்களை எல்லாம் வாசித்து வருகிறோம். எல்லாரையும் சொல்வதென்பது ஒரு பதிவில் முடியாதது... அதானால் நான் எழுத்து என்று ஒரு பகிர்வு ஆரம்பித்து வாராவாரம் ஒரு சிலரை அறிமுகம் செய்ய நினைத்தேன். அது ஆரம்பித்த ஒரு வாரத்தோடு கிடப்பில் கிடக்கு. சரி வாங்க இந்தத் தொடருக்காக, சிலரைப் பற்றி பார்க்கலாம். இங்கு சொன்னவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் எனக்குச் சிறப்பானவர்களே... சொல்லலைன்னு வருந்தாதீங்க... மனசுல இருக்கீங்க...

ஆம்... நான் வாசிக்கும் எல்லாருமே எனக்கு பிரபலங்கள்தான்... மேலும் பிரபலங்கள் என்று தனியாக பிரிக்கும் அளவுக்கான பிரபலங்களுடன் நான் எப்போதும் தொடர்பில் இருப்பதில்லை. மிகப் பெரியவர்கள் என்று நினைக்கப்படும் எல்லாருமே அடுத்தவர் பதிவுக்கு போவதில்லை... வாசிப்பதில்லை... அதனால் நான் அந்த பிரபலங்கள் வட்டத்தை விட்டு வெளியேதான் நிற்பேன். இப்போது நானும் அதிகம் கருத்திடுவது இல்லை என்பதால் என்னையும் பிரபல வட்டத்துக்குள் நுழைக்காதீர்கள்... வேலைப்பளுவின் காரணமாகவும், மனச்சோர்வினாலுமே வாசிப்பதில் தடை, மற்றபடி அனைவரையும் தொடர்ந்து வாசிப்பேன்.

இது மொய்க்கு மொய்க்கு என்ற நிலையில் பயணிக்கும் எழுத்து உலகம்தான் என்று சொன்னால் யாராலும் அப்படியில்லை என மறுக்க முடியாது. கடந்த ஒரு மாதமாகவே என்னால் யாருக்கும் சரியான முறையில் கருத்து இடமுடியவில்லை... ஏன் பலரை வாசிக்க கூட முடியவில்லை... எல்லாம் என் பக்கத்து பிரச்சினைகள்தான்... அதிலிருந்து மீளும்போது எப்பவும் போல் எல்லாருடைய எழுத்திலும் வலம் வருவேன் என்பது எனக்குத் தெரியும்... ஆனால் நான் வாசிக்கும் என்னை வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரிவதில்லை... இப்போதே பலரைக் காணோம்... இன்னும் சில மாதங்கள் கடந்தால் ஒரு சிலர் மட்டுமே என்னோடு தொடர்பில் இருக்கலாம். நான் கருத்துக்காக எழுதவில்லை... கருத்து வேண்டும் என்றும் நினைப்பதில்லை... இருந்தாலும் அடுத்தவர் தளத்தில் கருத்திடும் நண்பர் நம் பக்கம் வரவில்லையே என்ற எண்ணம் எழத்தானே செய்கிறது. அந்த நினைப்பின் இறுதியில் 'மொய்க்கு மொய்' கண் முன்னே வர, சரி என்னைக்கு நாம மொய் வைக்கிறோமோ அன்னைக்கு அந்த நண்பர் வரட்டும் என விட்டுவிட்டேன்.

நம் எழுத்தை காப்பி செய்வது குறித்து நான் எழுதியதற்கு நிஷா அக்கா, 'நம்ம எழுத்து பிடித்துத்தானே வாசிக்கிறார்கள்.. பகிர்கிறார்கள்... விட்டுவிடுங்கள்' என்று சொல்லியிருந்தார். அதெப்படி விட முடியும்.... நம் எழுத்தை இவர் எழுதியது எனக்குப் பிடித்ததால் பகிர்கிறேன் என்று சொன்னால் பரவாயில்லை ஆனால் அவர்கள் பெயரில் பகிரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும் இதை புத்தகமாக்க வேண்டும் என நமக்கு கனவு இருக்கும் அது நிறைவேறுவதற்குள் அவர்கள் அதை புத்தகமாக்கிவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்...? சொல்லுங்கள். நம் எழுத்து நமக்கானது... பிடித்தால் இவர் எழுதியது என்று சொல்லி பதியட்டும்... ஆனால் காப்பி பேஸ்ட் செய்வதை எப்படி ஏற்பது...?

தேவா சுப்பையா : வாசிக்கும் போதே நேசிக்க வைக்கும் எழுத்து... மெல்ல மெல்ல நம்மைத் தின்னும் எழுத்து.. படித்து முடிக்கும் போது பரவசத்தை அள்ளிக் கொடுக்கும் எழுத்து... என்ன எழுதினாலும் அதை ரசனையோடு கொண்டு செல்லும் எழுத்து... திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லும் எழுத்து... நீங்களும் வாசித்து பாருங்களேன்.


ஜோதிஜி: தேடல் நிறைந்த மனிதர்... ஒவ்வொரு பதிவிலும் பகிரும் கருத்துக்களுக்கான தேடல் அதிகம்... இவரின் பகிர்வில் நிறைய விவரங்களை அறியலாம். பல தரப்பட்ட தகவல்களைத் தேடி பகிர்வாக்கும் இவரின் மின்நூல்கள் மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்றிருக்கின்றன. இப்போது வலையில் அதிகம் எழுதுவதில்லை. இருப்பினும் வாசிக்க வேண்டிய பகிர்வர் இவர்.

பா.ராஜாராம்: கதையாகட்டும் கவிதையாகட்டும் அதில் லயிக்க வைக்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். அவ்வளவு அருமையான எழுத்துக்காரர்... இவரின் எழுத்தை வாசித்து பிடித்துப் போய் ஆனந்த விகடனில் அடிக்கடி கேட்டு வாங்கிப் போட்டார்கள். நான் சித்தப்பா என்று சொல்லும் இவரின் எழுத்து வாசித்தால் வசப்படுத்தும். நிச்சயம் ஒரு நல்ல எழுத்தை வாசித்த மனத்திருப்தி கிடைக்கும். இவர் சாகித்ய அகாதெமி வாங்கக் கூட அளவுக்கு உயர வேண்டியவர் ஏனோ இவர் கடந்த இரண்டு வருடங்களாக எழுதுவதில்லை.

தேனம்மை லெட்சுமணன் : நல்ல எழுத்து... நிறைய புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன... பத்திரிக்கைகளில் எழுத்துப் பணி... இப்படி நிறைய நிறைவான பயணங்களுக்கு இடையே வலையிலும் தொடர்ந்து எழுதுகிறார். இவரின் எழுத்துக்கள் உங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

கரிசல்மண்ணைச் சேர்ந்தவங்களுக்கு நாங்கதான் அதிகம் சாகித்ய அகாதெமி வாங்கியவங்க... எங்களில்தான் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமை எப்போதும் உண்டு. அதை தமிழின் கர்வம் என்று கூடச் சொல்லலாம். இதை இங்கு சொல்லக் காரணம்... அதை பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்... சமீபத்தில் கூட ஒரு புத்தக அணிந்துரையில் படிக்க நேர்ந்தது. அவர்களின் கர்வம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. நான் மேலே சொன்ன என் மண்ணின் சொந்தங்கள் போல் இன்னும் பலர் எங்க சிவகங்கை சீமையில் உண்டு... இவர்களின் எழுத்துக்களும் ஒரு நாள் சாகித்ய அகாதெமி வாங்கும்... அன்று எனக்குள்ளும் கர்வம் குடிகொள்ளும்.

இனி வாசிக்க வேண்டியவர்கள் சிலர்...

ஜெயசீலன் : துளசிதரன் சார் சொல்லிட்டாங்க... நல்ல எழுத்துக்காரர். நிறைய விஷயங்கள் பேசுவார். என்ன அடிக்கடி காணாமல் போய் விடுவார்.

வருண் : கருத்துப் போர் நிறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர், சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதால் கருத்து இடாமல் வந்துவிடுவேன். ஆனல் பல விஷயங்கள் கருத்துச் செறிவு மிக்கவை. இவரின் பதிவுகளுக்குப் போனால் நான் வாசிப்பது வந்திருக்கும் கருத்துக்களையும் அதற்கான இவரின் பதில்களையும்தான்...

மேனகா சத்யா : இவர் வலையில் பெரிய சாப்பாட்டுக்கடை அதிபர்... இங்கு போனால் விதவிதமாக சமைக்கக் கற்றுக்கலாம். வெரைட்டி வெரைட்டியாக செய்து அதை படமெடுத்து போட்டு நம்ம வயிற்றெரிச்சலை (ஆமா.. பார்த்ததும் சாப்பிடும் ஆசை வந்து வயிறு புடுங்க ஆரம்பிச்சிடும்ல அது வயிற்றெரிச்சல்தானே...) கிளப்பி விடுபவர்.போய் பார்த்து புதிது புதிதாய் சமைத்துச் சாப்பிடுங்க.

நிஷா அக்கா சொன்னது போல் மீரா செல்வக்குமார் அண்ணாவின் செல்லங்கள் 'ஓடி விளையாடு பாப்பா' சக்தி மற்றும் 'சின்னவள்' சூர்யா மற்றும் முத்துநிலவன் ஐயா பகிர்ந்திருந்த கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி செல்வி. வைசாலி பபோன்று இன்னும் நிறையப் பேர் வாசிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்னும் இன்னுமாய் காணாமல் போன நல்ல எழுத்தாளர்கள் நிறையப் பேரைச் சொல்ல எண்ணம்... எல்லாரையும் அடுக்க முடியாது... அதனால் கவிதைகளில் கொள்ளை கொள்ளும் 'வானம் வெளித்த பின்னும்' ஹேமா அக்கா, பார்ப்பவற்றை எல்லாம் சிறந்த பதிவாக்கும் 'வேடந்தாங்கல்' கருண், முகநூலில் குட்டிக் குட்டியாய் மௌனச் சிதறல் தொடுக்கும் கவிதையில் ஜொலிக்கும் 'எண்ணச் சிதறல்' அனிதா ராஜ், கவிதைகளின் நாயகன் என் ஆருயிர் நண்பன் 'இதயச் சாரல்' தமிழ்க்காதலன் என இவர்களையும் வாசியுங்கள்.

ஆன்மீகத்தில் எங்க 'தஞ்சையம்பதி' துரை. செல்வராஜூ ஐயா மனதுக்கு நிறைவாய் படங்களுடன் கலக்கலான, நாம் அறியாத தகவல்களை அள்ளித் தருவார். அங்கிட்டும் போய் ஆன்மீகம் பருகுங்கள். ஐயாவைப் போல் ஆன்மீகத்தில் அழகிய படங்கள் இணைத்து 'மணிராஜ்' என்ற அழகிய ஆன்மீகத் தளத்தை நடத்திய அம்மா இராஜராஜேஸ்வரி அவர்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சில நாட்கள் முன்னர் அவரின் தளத்தில் வந்திருந்த பகிர்வு கண்டு, ரொம்ப நாளைக்கு பின்னர் அம்மா வந்திருக்காங்களேன்னு போனா, அவங்க போன மாதம் இறந்த செய்தியை அவரின் பிள்ளைகள் பகிர்ந்திருந்தாங்க. ரொம்ப வருத்தமாப் போச்சு... முகம் தெரியாவிட்டாலும் எழுத்தின் மூலம் அம்மாவாய் மனசுக்குள் நிறைந்தவர்... இனி அவர் எழுதப் போவதில்லை என்ற நினைவு வாட்டுகிறது. அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அப்புறம் நாம கொஞ்சப் பேரை பிடிச்சவங்களை எழுதுங்கன்னு கூப்பிடணுமாம்... உங்க மனசுக்குப் பிடித்த பதிவர்களை நீங்க எழுதுங்க... எல்லாரும் எழுதலாமே...

பகிர்ந்த எழுத்தாளர்களின் தளம் செல்ல எனது "மனசு" வலைத்தளம் வாருங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (11-Mar-16, 10:41 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 52

மேலே