செயற்கை விவசாயம்
விரிஞ்சு கிடந்த வானத்துல
விடிஞ்சு கிடந்த காட்டுல
நாத்து நட்ட வேளை
நேத்து பேஞ்ச மழையில
ஆட்டம் ஆடிக் கிடந்தோம்...!
வந்த மழை மனச நிறச்சு போச்சு
விளைஞ்ச நாத்து வயிற நிறச்சு போச்சு..!
காலம் மாற
விஞ்ஞானம் தேற
விண்ணுலயும் மாற்றம்
மண்ணுலயும் மாற்றம்...!
பருவ மழை பொய்ச்சு போச்சு
பட்டு மண்ணு பட்டு போச்சு..!
இயற்கை உரம் மாறிப் போச்சு
ரசாயன உரம் வந்துடுச்சு
புழுவும் திங்கா மண்ணாச்சு
புல்லுலயும் மருந்து வாசமாச்சு
எல்லாமே வியாபார மயமாச்சு..!
அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டு
உள்ளதும் போச்சு நிலையாச்சு..
வாழ்ந்து கெட்ட மண்ண நம்பி
வாழுது இங்க வருங்காலம்..!
பயிருல களை விளைஞ்சா புடுங்கிடலாம்
பயிரே களையாத்தான் விளையுது என்ன பண்ண..?
மண்ணுலயும் தங்கல
பயிறும் திங்கல
சத்துத்தான் போன இடம் தெரியல
தெளிச்ச மருந்துதான் உறிஞ்சி புடுச்சோ...?
விதைச்சவ சோத்துக்கு அல்லாட
விலைகுடுத்தும் தரத்துக்கு அல்லாட
இடைத்தரகன் மட்டுமிங்க செழிச்ருக்கான்..!
சோத்துல நோய் ஓடி போச்சுதாம்
சோறே நோயாத்தான் கிடைக்குமோ எம்ம காலத்துல..?