கவிதைக்கொரு வாழ்த்து 21-03-2016 சர்வதேச கவிதை தினம் இன்று

கவிதை கவிதை கவிதை யென்று
==கவிதை நாளும் எழுது கின்றோம்
கவிதை என்றால் என்ன வென்றே
==கடுகள வேணும் அறியா மல்நாம்
கவிதை என்று எதையெதை யோதான்
==கருப்பொரு ளாகக் கொண்டு எழுதும்
கவிஞர் எவரும் கவிதைக் காகக்
==கவிதை எழுதி வைத்த துண்டோ?
காதல் அரும்பும் காலம் நெஞ்சில்
==கன்னல் ஆறெனப் பெருகும் எண்ணம்
தோதாய் சொல்லும் வார்த்தை யாலே
==தொடக்கி வைக்கும் கற்பனை பயணம்
ஏதே தோவென எழுதிப் படித்து
==இதயப் பலகை முழுதும் நிறைக்கும்
போதா வதுகவி தைக்காய் எவரும்
==பொழுது போக்காய் எழுதிய துண்டோ?
கவிதைக் கென்று சர்வ தேசம்
==கண்ட ஒருநாள் இன்றி லேனும்
கவிதைக் காக கவிதை ஒன்று
==கவிதை யாக எழுதி வைத்தே
கவிதை எழுதும் கவிஞர் கூட்டம்
==கவிதை தலையில் மகுடம் சூட்டி
கவிதை யாலே வாழ்த்தி வைப்போம்
==கால மெல்லாம் கவிதை வாழ.
***********************************
மொழியின் சிறப்பை முகையவிழ்க்கும் பூவின்
வழியில் உரைக்க உலகில் – எழிலள்ளித்
தெளிக்கும் கவிதை தினம்.
*************************************************
தினந்தினம் ஒவ்வோர் தினமென்று தத்தம்
மனப்போக்கில் கொண்டாடும் மாந்தர் – தினமென்று
ஒன்றை கவிதைக் கொதுக்கி உலகெங்கும்
நன்றாகக் கொண்டாடல் நன்று.
***********************************************
முத்தினம் ரத்தினம் மொட்டிளம் கொத்தினம்
அத்தினம் இத்தினம் சர்வதேச - வித்தாய்
விழுந்து முளைத்து மணம்வீச வென்று
எழுந்த கவிதை தினம்.
** கவிதை முன்னோடிகளுக்கும் கவிஞர்களுக்கும் மற்றும் கவிதா அபிமானிகளுக்கும் இதயம் கனிந்த கவிதை தின வாழ்த்து கவிதையின் சார்பாக ...
**மெய்யன் நடராஜ்