சொர்கமே என்றாலும் அது நாம் ஊர போல வருமா.?...

ஆற்றங்கரை ஆலமரம்
அய்யனார் கோவில் மண் குதிரை….

காலை கதிரவனை
துயிலெழுப்பும் கொண்டை சேவல்
புல் தோறும் பனித்துளிகள்
மரந்தொறும் பறவைகளின் சத்தங்கள்....

மார்கழி கோலம்
மாட்டு வண்டி பயணம்
எரியாத தெரு விளக்கு
அரிதாகி போன சிட்டு குருவி சத்தம்....

கட்டுத்தரி மாடுகள்
தினம் கதை சொல்லும்
கயத்து கட்டில் பாட்டிகள்....

மாலை வெயில்
மரத்தடி நிழல்
குளக் கரை
குளிக்காத தாமரை இலை....

தாவணி பெண்கள்
தரை உரசும் பாவாடை
தண்ணிர் குடம்
தலை நனைக்காத சும்மாடு....

ஏரி தண்ணீர்
தத்தளிக்கும் தவளை முட்டை
நடை பயிலும் நாரை கூட்டம்
முகம் பார்க்கும் மேக கூட்டம்....

நெல் வயல்கள்
வரப்பு நண்டுகள்
தோழோடு கலப்பை
கையோடு கயிற்றில் காளை மாடு....

மாமன் மகள்
மல்லிகை வாசம்
மருதாணி சிகப்பு
வெக்கத்தையே அதிகம் வெளிபடுத்தும்
வெகுளியான முகம்....

பல்லாங்குழி
பணியார சட்டி
மண் பானை
மணக்கும் கிணத்து தண்ணி....

நிலா சோறு
பௌர்ணமி வெளிச்சம்
ஒரு கை மட்டும் கழுவி
பலர் வாய் துடைக்க....

தாய் மடி
தலையணை வேண்டாம்
தாலாட்டு போதும்
தலை கோதும் விரல்கள்
காற்று வீசும் முந்தானை
தென்றல் காற்றும் தோற்று போகும்....

மழை வெள்ளம்
காகித கப்பல்
ஆடி காற்று
பட்டமாய் பறக்கும் சட்டைகள்....

வேப்ப மர பல் குச்சி
கம்பங்க்கூழ் கலியோடு
மிளகாய் வத்தல்
பசிக்கும் ருசிக்கும்....

காது குத்து கல்யாணம்
மாமன் சீர்
கரி சோறு
சமபந்தி விருந்து.....

சிறுவர்கள் கூட்டம்
ஊர் சுத்த மிதிவண்டி சக்கரம்
ஊரையே பயமுறுத்தும்
ஒத்த பனைமர பேய் கதைகள்....

பாசகார நண்பர்கள்
படிக்காத மேதைகள்
பணம் தவிர
உதவி என்றால்
உயிரையும் கொடுக்கும் கர்ணர்கள்…

சித்திரை பௌர்ணமி பொங்கல்
சர்க்கரை தை பொங்கல்
கடிக்க செங்கரும்பு
மடக்கி பிடிக்க ஜல்லிகட்டு காளை....

வைகாசி முதல் ஞாயிறு
மாரியம்மன் கோவில் காப்பு கட்டு
எட்டாம் நாள் பொங்கல்
ஆடிவரும் கரகாட்டம்
குத்தாட்டம் போடும் எங்கள் பட்டாளம்....

தேர் திருவிழா
ஊர் கூடி ஒன்று சேர்ந்து இழுக்கும்

பெண்ணகளை வம்புகிளுத்தபடி எங்களின்
பாரம்பரிய வீதி உலா....

மஞ்சள் விளையாட்டு
மாமன் மகளோடு
கொஞ்சம் பிரச்சனைதான்
சண்டை இல்லாமல் திருவிழா முடியாது....

உறவுகளில் வாழ்த்துக்களோடு
அழகழகாய் ஆடைகள் உடுத்தி
கேட்டதுக்கு மேல் சீர் வரிசை கொடுத்தாலும்
கண்களை கசக்கி கொண்டே
அண்ணனின் பழைய சட்டையை கேக்கும்
உடன் பிறந்தவளின் பாசம்...

சுதந்திர போராட்ட தியாகிகள்
கம்யூனிஸம் பேசியே முறிக்கி கொள்ளும் மீசைகள்....

மணல் மேடு கட்டி
அமர்ந்து பார்க்கும்
டூரிங்க்ஸ் டாகிஸ் கருப்பு வெள்ளை திரைபடங்கள்....

ஒட்டு கூரை
ஒழுகும் பள்ளி கூடங்கள்
காமராஜர் சத்துணவு
காத்து கிடக்கிறது சமச்சீர் கல்விக்காக....

சின்ன சின்ன சோகங்கள்
சின்ன சின்ன சந்தோசங்கள்
சொர்கமே என்றாலும் அது நம் ஊர போல் வருமா.?????....

எழுதியவர் : பாலமுதன் ஆ (17-Jun-11, 12:07 pm)
பார்வை : 750

மேலே