காப்பியம் படித்ததில் பிடித்தது --- உலகத் தமிழ் பொதிகைத் தென்றல்

தனிப்பாடல்களின் தொகுப்பாக அமையாமல், நீண்ட கதையைத் தொடர்நிலைச் செய்யுளில் அமைத்துக் கூறுவது காப்பியம் ஆகும். காப்பியத்தில் கிளைக் கதைகள் பல இடம் பெறுவதுண்டு.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பிற காப்பியங்கள் எனத் தமிழ்க் காப்பியங்களை வகைப்படுத்தலாம்.
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்4. வளையாபதி - பெயர் தெரியவில்லை5. குண்டலகேசி - நாதகுத்தனார்
இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
ஐஞ்சிறு காப்பியங்கள்
1. சூளாமணி - தோலாமொழித் தேவர்2. யசோதர காவியம் - வெண்ணாவலூருடையார் வேள்3. உதயணகுமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை4. நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை5. நாககுமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பிற காப்பியங்கள்
1. பெருங்கதை - கொங்குவேளிர்2. கம்பராமாயணம் - கம்பர்3. வில்லிபாரதம் - வில்லிபுத்தூராழ்வார்4. பெரியபுராணம் - சேக்கிழார்5. கந்தபுராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்6. தேம்பாவணி - வீரமாமுனிவர்7. சீறாப்புராணம் - உமறுப்புலவர்8. பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாசர்
இவையேயன்றித் திருவிளையாடற்புராணம் முதலான தலபுராணங்களும், பிற்காலத்தில் இயற்றப்பட்ட இயேசு காவியம் போன்றனவும் காப்பியம் என்னும் இலக்கியப் பகுப்பில் அடங்குவனவாகும்.

இக்காப்பியங்களின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை ஆகியன குறித்து இனிக் காணலாம்.
6.2.1 உருவம்

சிலப்பதிகாரம் ஆசிரியப்பா, வெண்பா, இடையிடை உரைநடை, விருத்தம் எனக் கலவையான யாப்புடையது.

மணிமேகலை, பெருங்கதை ஆகியன ஆசிரியப்பா யாப்பின. ஏனைய காப்பியங்கள் யாவும் விருத்தப்பாக்களால் ஆனவை.

ஆசிரியப்பா
சிலம்பு 3 காண்டங்களும், 30 காதைகளும் கொண்டது.

புகார்க் காண்டம் - 10 காதை
மதுரைக் காண்டம் - 13 காதை
வஞ்சிக் காண்டம் - 7 காதை
என்னும் அமைப்புடையது. ஆசிரியப்பாக்கள் 'என்' என்னும் ஈற்றசை பெற்று முடிகின்றன.

விருத்தம்

கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் (6, 7, 8 சீர்கள்) கலிவிருத்தம் ஆகியவற்றால் பெரும்பான்மையான காப்பியங்கள் யாக்கப் பெற்றுள்ளன. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம் ஆகும்.
ஆசிரிய விருத்தம்- 6 சீர்கள்

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ

(கம்பராமாயணம்)

கலிவிருத்தம்
நான்கு சீர்களையுடையதாகிய அளவடிகள் நான்கு கொண்டது கலிவிருத்தமாகும்.

ஆனை துரப்ப அரவுஉறை ஆழ்குழி
நால்நவில் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ
(சூளாமணி)

(துரப்ப = துரத்த; நால் = தொங்கும்; நவில் = விழுது; நாலும் = தொங்கும்)
யானை துரத்த அஞ்சி ஓடி வந்தவன் பாம்பு உள்ள ஒரு குழியில் சறுக்கி விழ, தற்செயலாக ஆலம் விழுது ஒன்றைப் பற்றியவனாக உள்ளான்; அதுவும் அறுந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தேனடையிலிருந்து ஒழுகும் தேன்துளியைச் சுவைக்கின்றான் என வாழ்வின் இன்பத்தை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.
6.2.2 உள்ளடக்கம்

'பாவிகம் என்பது காப்பியப் பண்பே' என, காவியம் முழுவதும் பரவிக் கிடப்பதும் மையப்பொருளாவதுமாகிய பொருண்மையைப் பாவிக அணியாக எடுத்துரைக்கும், தண்டியலங்காரம்.காப்பியத்தில் கிளைக்கதைகள் பல வருதல் போன்றவற்றால் ஒன்றற்கு மேற்பட்ட நீதிக் கருத்துகள் பல இடம் பெறுதல் இயல்பேயாகும்.

அறம் பிறழாமை, மண்ணாசையின் தீங்கினையுரைத்தல், சமயம் சார்ந்த கருத்துகள் என மூவகைகளில் காப்பிய உள்ளடக்கத்தினைக் காணலாம்.

அறம் பிறழாமை
சிலம்பில் மூவகைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்

என்பது பாயிரப் பகுதி.

1. அறம் பிறழாமை
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்

எனப் பாண்டியன் உயிர் நீக்கின்றான்.

2. பத்தினியின் பெருமை
இவளோ
கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணி

என்பது கவுந்தியடிகள் கூற்று.

3. ஊழ்வினை
கோவலன் கொலை செய்யப் பெற்றமையைக் கூறும் பகுதி.

கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென

மண்ணாசை கூடாது

வில்லிபாரதம் மண்ணாசை கூடாது என்பதை வலியுறுத்தக் காண்கிறோம். பாண்டவர்களிடமிருந்து சூதாடி நாடு கவர்ந்த கௌரவர்கள், பாண்டவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முடித்து மீண்டும் வந்து நாடு கேட்டபோது, சிறிதளவும் நிலமும் தரமறுத்து, அதனால் ஏற்பட்ட போரில் உறவினர் சூழ அழிந்தொழிந்தனர்.

சமயம்

சிலப்பதிகாரம் சமயப் பொதுநோக்குடையதாகத் திகழ்கின்றது. மணிமேகலை, பௌத்த சமய மேம்பாட்டை உணர்த்துவதற்கென்றே எழுதப் பெற்றது. சீவக சிந்தாமணி சமணமே உயர்ந்தது என நிறுவும் நோக்குடையது. வளையாபதி சமண நூல். குண்டலகேசி பௌத்தக் காப்பியம்.

ஐஞ்சிறு காப்பியங்கள் சமணம் சார்ந்தவையே என்பது குறிப்பிடத் தக்கது.
பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவை சைவ சமயம் சார்ந்தவை. இவை முறையே சிவபெருமானின் வலக்கண், நெற்றிக்கண், இடக்கண் எனப் போற்றப் பெறுகின்றன.
கம்பராமாயணமும் வில்லிபாரதமும் வைணவம் சார்ந்தவை.
தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம் ஆகியன கிறித்துவ சமயத்தன.
சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியமாகும்.
தலபுராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றன் பெருமையுரைப்பன. இவையும் காப்பியம் எனத்தகும் தன்மையன. இவை எண்ணற்றன.
இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகிய புலவர் குழந்தையின் இராவண காவியம், கவிஞர் முடியரசனின் பூங்கொடி ஆகியன முறையே தமிழினம், தமிழ்மொழி ஆகியவற்றின் சிறப்புரைக்க வந்தனவாகும்.
6.2.3 உத்திமுறை
விரிவாகச் சொல்வதுடன், விளங்குமாறு சொல்வதும் காப்பியத்தின் இன்றியமையா இயல்புகள் ஆதலின் பல்வேறு உத்திமுறைகளைப் பயன்படுத்த வேண்டியது காப்பியங்களின் தேவையாகின்றது.


தன்மையணி

துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி, உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.

குடப்பால் உறையா, குவிஇமில் ஏற்றின்மடக்கணீர் சோரும் - வருவதொன்று உண்டு ; உறிநறு வெண்ணெய் உருகா, உருகும்மறிதெறித் தாடா - வருவதொன்று உண்டு ;நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்.மான்மணி வீழும் - வருவதொன்று உண்டு
(சிலப்பதிகாரம்)

உவமையணி

உவவனம் என்னும் மலர்வனம், ஓவியம் தீட்டிய போர்வையைப் போர்த்தியதுபோல் உள்ளது என்கிறது மணிமேகலை.

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே
என்பது அது.
உதயகுமாரன் செலுத்திய தேரின் வேகம்,
ஓடுமழை கிழியும் மதியம் போலமாட வீதியின் மணித்தேர்க் கடைஇ

என உவமை கொண்டு உணர்த்தப்படுகின்றது.

தற்குறிப்பேற்றம்

மதுரையில் கண்ணகிக்கு நேரப்போகும் துயரினை அறிந்து, அதனால் தனக்குப் பெருகிய கண்ணீரைக் கோவலனும், கண்ணகியும் அறியாவாறு பூக்களாகிய ஆடையால் மறைத்துக் கொண்டது வையை ஆறு என்கிறது சிலம்பு. அப்பகுதி:

வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி
(புறஞ்சேரி இறுத்த காதை)

.
பின்னோக்கு உத்தி

நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல் என்னும் அமைப்பில் கதை பின்னப்படும் முறை பின்னோக்கு உத்தி எனப்படும்.

கோவலன் கொலைப்படுவதற்கு முன்பாக, அவனைக் குறித்துப் புகழ்கிறான் மாடல மறையோன்.
மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில், பரிசுபெற வந்த முதியவர் ஒருவரை யானை தன் துதிக்கையால் பற்ற, உடனே ஓடிச்சென்று அவரை மீட்டு யானையை அடக்குகிறான் கோவலன். இதனால் 'கருணை மறவன்' எனப் பாராட்டப் பெறுகிறான்.
தன் குழந்தையைப் பாம்பிடமிருந்து காத்த கீரிப்பிள்ளையைத் தவறுதலாகப் புரிந்து கொண்ட பார்ப்பனி, அதனைக் கொன்றதால் தன் கணவனால் புறக்கணிக்கப்பட்டபோது, வேண்டியன செய்து அவர்களை ஒன்று சேர்க்கிறான் கோவலன். அதனால் 'செல்லாச் செல்வன்' எனப்படுகிறான்.
பொய்ச் சாட்சி கூறிய ஒருவனைச் சதுக்கப் பூதம் விழுங்க முற்பட்டபோது, கோவலன் அவனுக்காகத் தன் உயிரைத் தரமுனைகின்றான். அவ்வுதவி ஏற்கப் பெறாமையால் அவன் குடும்பத்தைக் காக்கின்றான். இதனால் 'இல்லோர் செம்மல்' எனப்படுகிறான்.
இவற்றால் கோவலன் பெருமை கூடுகிறது; கோவலன்மேல் கற்போர்க்கு இரக்கம் பிறக்கிறது.

கனவுக் குறிப்பு
காப்பியங்களில் கனவுக் குறிப்பு, முன் உணர்த்தல் உத்தியாகப் பெரும்பாலும் கையாளப் பெறுகின்றது. சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் எனப் பலவற்றிலும் இதனைப் பரக்கக் காணமுடிகின்றது.

சிலப்பதிகாரத்தில், கோப்பெருந்தேவி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரின் கனவுகளும் சுட்டப் பெறுகின்றன. அவற்றின்படி, அடுத்தடுத்த நிகழ்வுகளும் அமைகின்றன.
கோப்பெருந்தேவி கனவில், 'பாண்டியனின் வெண்கொற்றக் குடையும் செங்கோலும் வீழ்கின்றன; வாயில்மணி அதிர்கிறது; எண்திசையும் அதிர்கின்றன; ஒளியை இருள் விழுங்குகிறது; இரவில் வானவில் தோன்றுகிறது; பகலில் விண்மீன்கள் எரிந்து வீழ்கின்றன'.
கோவலன் கனவில், ஆடை கொள்ளப்பட்டு எருமைமீது அவன் ஊர்ந்து செல்கிறான்.
கண்ணகி கனவில், கோவலனும் கண்ணகியும் வேற்றூர் சென்ற நிலையில், பொய்ப்பழி தோன்றுதலும், கோவலன் தீங்குறுதலும், கண்ணகி வழக்காடுதலும், அரசனுக்கும் ஊருக்கும் அழிவேற்படுதலும் தோன்றுகின்றன.
கனவும் ஒரு சகுனமாய் அமைகின்றது.

எழுதியவர் : (23-Mar-16, 10:16 pm)
பார்வை : 676

மேலே