சுயம் உன் சுயம்பு
அம்மா என்ற சொல்லை
மம்மி என்று மாற்ற
மதி கெட்டு நீயும்
மயங்கி நிற்காதே
மகுடி வாசகர்கள்
மயக்கம் தந்துன்
புராதன புகழ் ஊரிற்கு
புதிய பெயர் சூட்ட
சுயமற்று நீ இருந்து
சரித்திரத்தை மாற்றாதே
நாமிருவர் நமக்கொருவர்
எனும் சீனத்து சித்தாந்தம்
சிதையும் நேரத்திலே
திட்டமிட்ட வட்டங்களில்
சிக்கித் தவித்து உன்
சந்ததியை இழக்காதே
வஞ்சகமாய் வழி மறித்து
புன் சிரிப்பில் கதை பேசி
நன் நடிப்பில் உனையீர்த்து
மெல்ல மெல்ல உனை மாற்றும்
நரகத்தில் சிக்கி
உன் இனத்தை மாய்க்காதே
கூட்டத்தில் குழுச்சேர்ந்து
குழப்பத்தை சுரண்டி விட்டு
குரூரமாய் குழி பறித்து
குறி சுடும் வேடர்களின்
அம்புகளில் கட்டுண்டு
காலத்தை மாற்றாதே
ஏன் என்ற ஓரு கேள்வி
உன் சுயத்தை நீ கேட்டு
தப்பாமல் சிந்தித்து
எப்போதும் நடப்பாயானால்
இனியும் இழக்காமல்
இருப்பவற்றை இறுக்கி வைத்து
நின்று நிதானித்து
வென்றெடுக்கலாம் வேண்டியதை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
