ஊழலும் ஒரு ஆரோக்கியமான பரிணாமமே - 1
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா
- என்று பிரதிபலன் எதிர்ப்பார்த்த காலத்தது தான் "ஊழல்"
பண்டமாற்று முறையிலும் கூட
பொருளுக்கு பொருள் மட்டுமிருந்தது.
என்று பணி என்பது
பதவி, திறமை என்று
சம்பந்தப்பட்டதோ அன்றிலிருந்து
லஞ்சம் வேரூன்றி விட்டது.
ரேஷன் வந்த நாளிலிருந்து
பேசன் தான் ஊழல்.
எது எல்லாம் கூடாது முடியாது
என்று சொல்லிவிட்டு
அதற்கென்று
ஒரு குறுக்கு வழி உருவாக்கியது தான்
இதற்கெல்லாம் முன்னோடி.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
என்றான பின் தான்
புதிய வாழ்வியல் பற்றி அனுபவம் பாடமானது.
படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம்.
எழுதிய கவிக்கோன் அறிவான்
ஊதியமின்றி ஊழியம் செய்தவர்கள்
காமராஜர் ஜீவா போன்றோர் - அவரை
வாழத்தெரியாதவர்களாக்கி விட்டது
யார், நாம் தானே?
லஞ்சம் ஊழல் இன்று
விதை விட்டு வேர் விட்டு விழுது விட்டு
கிளைகளாய், மரங்களாய், வனங்களாய் காட்சி தர
நல்லவனாய் வாழ்ந்து சென்றவர் எல்லாம்
காலி செய்த இடத்தில்
பந்தல் போட்டு பின் பரிசம் போட்டது
பார்த்திருந்தோம்.
உடம்பில் மனதில் அழுக்கை அனுமதித்தோம்,
பின் அதை ஊரில் நாட்டில் சகித்தோம், சளைத்தோம்.
இன்றென்ன புதியதாய்
ஊழலுக்கு எதிராக
உருவாகிப்போன உபதேசம்.
படித்தவன் படைத்தவன் யாராகிலும்
பொருள் படைத்திருந்தால் அவனுக்கீடாகுமா?
என்றானபின்
வலிந்தவனுக்கே வாழ்வு மெலிந்தவனுக்கில்லை
என்றுமானபின்
ஊழல் என்பதை எதிர்ப்பவன்
ஒழுக்கசீலன் சில காலம் வரை.
ஊழல்வாதிகளை எதிர்த்து
பேசுபவன் சுயநலவாதியாய்,
ஏசுபவன் சந்தர்ப்பவாதியாய்
கண்களில் தெரிவதை மறுக்க முடியுமா?
உத்தமன் என்றொருவன் இங்கிருந்தால்
அவனால் இங்கே எதுவும் ஆகப்போவதுமில்லை.
சூது கவ்வும் சூழல் இங்கு
சுற்றி பாருங்கள்.
நல்லவன் என்ற சான்றிதழுக்கும்
இங்கே ஒரு விலையுண்டு.
இலவசமாக இங்கு எதுவுமில்லை.
சிந்தனையாளர்கள் இங்கு தினம் தினம்
புற்றீசல் போல் பொங்கி சொல்கிறார்கள்:
"ஊழல் கூடாது" என்று.
கண்ணில் படலாம்
அப்படியொரு நாள்
கானல் நீராய்.
அது தானே நிதர்சனம்.
(தொடரும்)