ஒட்டிய பேயும் வாட்டிய பீதியும்
புதிய மாணாக்கர்களை
“ராகிங்” செய்து துன்புறுத்தி
பள்ளிக்கூடத்தை விட்டு
வெளியேற்றப்பட்டதில்
வேதனையுற்று மனமுடைந்து
தற்கொலை செய்துகொண்டவனின்
ஆவி தன் மரணத்திற்குக் காரணமானவனின்
உடலில் புகுந்திருந்ததென்று
ஓட்டவந்திருந்தான் ஒரு பேயோட்டி.
கண்ணுக்குப்புலப்படாத
ஆவிகளை முதலீடாகக் கொண்டு
நடத்திக்கொண்டிருக்கும்
மந்திர தந்திர வியாபாரத்தில்
பேர் போன அவனின் பேர் சொன்னால்
பேய் நடுங்குமென்பது ஊராரின்
உயர்ந்த (மூட) நம்பிக்கை.
கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையும்
நெற்றியில் சாம்பலால் பட்டையும்
இல்லாததென்று நாம் நம்புவதும்
உள்ளதென்று ஏமாளிகள்
நம்புவதுமான பேய்களைப்
பயமுறுத்துவதற்காகவென்று
பார்ப்பவர்களுக்குப் பீதியூட்ட
சோம்பேறித்தனத்தால்
வெட்டப்படாத தலைமுடியை
அவிழ்த்துவிட்டுக் கட்டியிருந்த
நீண்டநாள் சலவைக்குப்போகாத
காவியணிந்தவனின் அன்றைய
வருமானத்திற்கான பணி
மிகவும் பயங்கரமாகத் தொடங்கியது.
பச்சை முட்டையும்
பழுத்த எழுமிச்சம் பழங்களும்
பழம் பாக்கு வெற்றிலை வடை
கடையில் வாங்கிய திண்பண்டம்
உச்சக்கட்டத்தில் தீயிலிட்டு
பார்வையாளர்களை வசீகரிக்கக்
குங்கிலியம் இருந்த பொருட்களோடு
தொடங்கப்பட்ட மந்திர உச்சாடனங்கள்
மூடி திறவாத சாராயக்குப்பியைக்
கண்டமாத்திரத்தில் ஓங்காரமானது
பேய் பிடித்தவனென்று
நம்பப்படுகின்ற பீதிக்குட்பட்டவன்
மந்திர உச்சாடனத்தில்
மிரண்டு போயிருக்கக் கூடும்
இல்லை சாட்டைக்குப் பயந்திருக்கலாம்
தப்பிக்க வழிதேடி அசைந்த
நிஷமொன்றில் புலம்பியதை வைத்து
ஒரு எழுமிச்சம்பழத்தை கடித்துத் மென்று
தின்றவாறே தன் சுயபுராணத்தை
பாட ஆரம்பித்தவன் “நீ எதுக்கா வந்தே..”
பேயோடு பேட்டிஎடுத்தான்
ஒரு சில மணித்தியாலப் போராட்டத்தில்
மலை ஏறிவிடுவதாக வாக்குமூலம்
வழங்கிய பேய் சொன்னது ..
“டேய் மந்திரவாதி
நான் வந்த வேலையை
பார்க்கவிடாம என்னைத் திருப்பி
அனுப்பிட்ட இல்ல ..
நான் இப்போ போறேன் ஆனால் நீ
எப்போவாவது செத்து ஆவியா
வருவாய் இல்லையா உன்ன
அப்போ பார்த்துகிறேண்டா”
போய்விட்டது அது .
பேயின் சவால் அடிவயிற்றில்
புளியைக் கரைக்க
அவசர அவசரமாக காத்திருந்த
சாராயக்குப்பியைத் திறந்து
மடமடவென குடித்துத் தள்ளியவன்
தயாரானான் கூடிய சீக்கிரமே
மயானத்தில் இடம்பிடிக்க..
*மெய்யன் நடராஜ்