நிதர்சன வாழ்க்கை

நிதர்சன வாழ்க்கை

“அம்மா தங்களின் உழைப்பிற்க்கு ஓய்வளிக்க எனது திறமைகள் அனைத்தும் வெளிப்படுத்தி இன்று நடக்கும் எங்கள் கல்லூரி வளாகத்தேர்வில் தேர்ந்தெடுக்கபடுவேன்”. என்று பார்வதியின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் வேண்டினான் பிரபு. “மகனே எனது உழைப்பிற்க்கு நீ ஓய்வளிக்கிறாய் என்பதைவிட பல வழிகளில் போராட்டம் நிறைந்த இந்த சமுதாயத்தில் நான் ஈன்றெடுத்த பிள்ளை உன்னை நீயே காத்துக் கொள்ள மனம் நிறைவான ஊதியமளிக்கும் ஒரு வேளையில் நீ அமர்ந்தாள் போதும் மகனே, எழுந்து கல்லூரிக்கு செல், உனது திறமைகள் அனைத்தையும் கல்லூரி வளாகத்தேர்வில் தயக்கம் ஏதுமின்றி வெளிப்படுத்து வெற்றி நிச்சயம் உன்னை தேடிவரும் என ஆசீர்வாதம் அளித்தாள் மகனுக்கு.
“என்ன பிரபு இன்று நடை உடை அனைத்திலும் மாற்றம் தெரிகிறது, நமது கல்லூரி வளாகத்தேர்வில் பணி ஆணை பெற்றுவிடுவாயோ”. என புருவம் உயர்த்தினான் நண்பர்களோடு இருந்த கண்ணன்,
“ஆம்..... கண்ணா...... நேற்று இறைவன் அருளால் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் இன்று எப்பாடு பட்டாவது நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்று பணி ஆணை பெற்றுவிட வேண்டும். நீங்கள் எல்லோரும் தந்தை நல்ல உத்தியோகத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள், நானோ சிறு வயதிலேயே சாலை விபத்தில் தந்தையை பறிகொடுத்தவன். என்னை இத்தனை நாள் வளர்த்து படிக்க வைக்க, எனது தாய் எத்தனை வேதனைகளை அனுபவித்தார் என கண் எதிரே கண்டவன் நான், ஆகையால் எனக்காக இல்லை எனினும் எனது தாய் பட்ட வேதனைகளுக்காகவும், எனது தந்தையின் பெயரை நிலைநாட்டவும் இன்று நான் பணி ஆணை பெற்று விட வேண்டும் நண்பா”...... என கண் கலங்கினான் பிரபு.
“நண்பா..... இத்தனை நாள் இளமை உணர்ச்சிகளுக்கு உன்னை நீ பறிகொடுக்காமல் தவம் செய்பவனாய் படித்தாய் அல்லவா, அத்தவத்திற்கான வரமாய் நிச்சயம் பணி ஆணை பெருவாய் தயங்காமல் வா நேர்முகத்தேர்வு பெயர் பட்டியலில் கையொப்பமிட்டு காத்திருக்களாம்”. என பிரபுவின் கரங்களைப் பற்றியவாறு கோபிநாத் அழைத்துச் சென்றான்.
மதிய உணவு வேளை நிறைவடைந்து மாணவர்கள் அனைவரும் கல்லூரி கலையரங்கத்தில் ஒன்று கூடினார்கள். கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் பேராசிரியர் பரமசிவன் விழா மேடைக்கு வர அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று அமைதியானார்கள்,
“வருங்கால தொழில்துறை வல்லுனர்களே அனைவரும் அவரவர் இருக்கையில் அமருங்கள்….. நமது கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்ற கல்லூரி வளாகத்தேர்வானது இன்று நிறைவடைகிறது. கல்லூரி வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இவ்விழாவில் பணி ஆணை வழங்கப்பட இருக்கின்றது, சிறப்பு விருந்தினர் அவர்கள் வரும்வரை அனைவரும் அமைதி காக்கும்படி என் மாணவச்செல்வங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”..... என பேராசிரியர் சிறு உரையை முடித்துக்கொண்டார்.
பேராசிரியர் பரமசிவன் விழா மேடையிலிருந்து பொறுமையாக இறங்கி வரும் வேளையில் திடீரென அவரது நடை நுழைவாயிலை நோக்கி வேகமெடுக்க மாணவர்கள் அனைவரும் கலையரங்கத்தின் நுழைவாயிலை திரும்பிப் பார்த்து வியந்து போனார்கள். பார்க்கவே அருவெறுக்க தோன்றும் தோற்றத்தோடு ஒருவர், அவரை அணைத்தவாறே கல்லூரி முதல்வர் மற்றும் சில பேராசிரியர்கள் என அனைவரும் விழா மேடையை நெருங்க மாணவர்கள் அனைவரும் நண்பர்களோடு முணுமுணுத்தாவாறே பேசிக்கொண்டு எழுந்து நின்றனர்.
கல்லூரி முதல்வர் விழா மேடையில் நின்று அனைவரும் அமருங்கள் என உரைத்தார், மாணவர்கள் இருக்கையில் அமர்ந்தும் மாணவர்களிடையே அமைதிக்கு மாறாக சலசலப்பு நீடித்தது. பேராசிரியர் பரமசிவன் மாணவர்களின் சலசலப்பால் சற்று வருத்தத்தோடு பேசத்துவாங்கினார். மாணவர்களே நமது கல்லூரி வேலைவாய்ப்பு முகாம் விழாவிற்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் அமைதி காத்திருப்பதே ஒழுக்கமாகும் என குரலில் கோபத்தை வெளிப்படுத்தினார். தற்ச்சமயம் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமை உரையாற்றி சிறப்பு விருந்தினரை கவுரவிப்பார் என கூறிவிட்டு மாணவர்களின் சளனத்தால் வருத்ததோடு இருக்கையில் அமர்ந்தார் பேராசிரியர்.
“மாணவர்களே இன்னும் சிறிது நேரத்தில் நமது சிறப்பு விருந்தினர் அவர்களின் பொற்கரங்களால் நமது கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பணி ஆணையை வழங்க உள்ளார்கள் ஆகவே மாணவர்கள் அனைவரும் அமைதிகாத்து இவ்விழாவிர்க்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் சிறப்பு விருந்தினர் தொழில் அதிபர் அவர்களை சிறப்புரையாற்றும்படி அழைக்கிறேன்”.... என கல்லூரி முதல்வரும் மாணவர்களின் சலசலப்பிற்கு மத்தியில் பேச முடியாமல் வருத்தத்தை முகத்தோற்றத்தில் காட்டியவாறு இருக்கையில் அமர்ந்தார்.
கருவேலமரத்தின் நிறமுடைய சிறுசிறு பட்டைகளைப் போன்று முகத்தில் கோரமான தோற்றம், உடைகளால் உடல் மூடப்பட்டாலும் இரு கரங்களின் உள்ளங்கையின் பின்புறமெல்லாம் உருக்குழைந்த நிலையோடு இருக்கையை விட்டு மைக்கின் முன்பாக வந்து நின்றார் சிறப்பு விருந்தினரும் தொழிலதிபருமான குணசேகரன். மாணவர்களின் சலசலப்பு மேலும் அதிகரிக்க கல்லூரி முதல்வரும், பேராசிரியரும் வெறுப்போடு செய்வதற்கரியாது ஒருவரையொருவர் பார்த்தனர்.
தொழிலதிபர் குணசேகரன் பேசத்துவங்கினார். “வாழ்வில் துணிவோடு எதிலும் எதிர்நீச்சல் போட காத்திருக்கும் இளைய மாணவச் சமுதாயமே சலசலப்பான உங்களின் வினாவிற்க்கு நானே பதில் உரைக்கின்றேன், ஆம்....... நீங்கள் அனைவரும் என்னைபற்றி சிந்தித்தது உண்மைதான், நான் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு எய்ட்ஸ் நோயாளிதான் என ஒப்புக்கொள்கிறேன்”...... என்றதும் மாணவர்களிடம் எந்த சலனமும் இல்லை.
கலையரங்கமே அமைதியானது, மாணவர்களின் முகங்கள் எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தவாறு பேசுவதைக் கவனிக்கத் துவங்கினர், தொழிலதிபரும் பேசத்துவாங்கினார். நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தேன், எனது பெற்றோரின் அறியாமையால் அவர்களைப் பாதித்த இந்த நோயால் அவர்களின் மூலமாகவே நானும் இந்நோய்க்கு ஆளானேன். இருப்பினும் மனித வாழ்க்கை என்பது இறைவன் படைப்பில் அரிதான படைப்பாகும் அதனை வாழக் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர ஏதேனும் காரணம் கூறி வீழ்ந்துவிட கூடாதென எண்ணினேன். ஆகவே பல இன்னல்களுக்கு மத்தியில் உங்களின் பேராசிரியர் பரமசிவன் போன்ற பல நல்ல உள்ளங்கள் கொடுத்த ஊக்கத்தினால் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு நானே முதலாளியானேன். எனது நிறுவனத்தில் உள்ள காலி இடங்களை நிறப்பவே இக்கல்லூரியில் அனைத்துத் துறையிலும் தகுதியான முன்னூறு மாணவர்களை இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறோம். இங்கு பணி ஆணை பெரும் அனைவருக்கும் துவக்க ஊதியமாக முப்பதாயிரம் வழங்கப்படும் என தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் மாணவர்களே... என்றதும் மாணவர்களிடமிருந்து கலையரங்கத்தை அதிரவைக்கும் அளவுக்கு கறவோசை எழுந்தது.
“மேலும் பேசத்துவாங்கினார் தொழிலதிபர். மாணவர்களே உள்ளத்தில் எழும் எண்ணங்கள் யாவும் நல் வழியில் செல்வதாகவும், எண்ணியதை முடிக்க இடைவிடா முயர்ச்சியும் ஒருவனிடம் இருந்தால் உடலைத் தீண்டும் எந்த நோய்க்கும் வலிமை குறைவுதான் என்பதற்கு நானே உதாரணமாவேன். தற்போது பணி ஆணையை வரிசையாக வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்....” என்று உரையை முடித்துக் கொண்டார்.
பேராசிரியர் மாணவர்களின் பெயர்களை வாசிக்க கல்லூரி வளாகத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தொழிலதிபரை வியப்புடன் பார்த்தவாறே பணி ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.
பிரபுவைக் காணவில்லையே என்று கண்ணன் கேட்க, நானும் தேடிபார்க்கிறேன் எங்கும் காணவில்லை பேருந்துக்கு நேரமாகிவிட்டது வா என்ற நண்பனோடு கண்ணன் புறப்பட்டான். தனது கணவனின் புகைப்படத்திற்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருக்க திடீரென தன்னைக் கட்டிபிடித்து அழுகின்ற பிரபுவைப் பார்த்து பதறிபோனாள் பார்வதி. பிரபு வேளை கிடைக்க வில்லை என்றால் வருந்தாதே அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் உன் திறமையை அங்கே வெளிப்படுத்து என்றவாறு மகனின் கண்ணீரைத் துடைத்து அவனைத் தேற்றினாள்.
“இன்னொரு வாய்ப்பை தேடும் அவசியமில்லை அம்மா, நானும் பணி ஆணைப் பெற்றேன் என தாயின் பாதத்தில் அவன் பெற்ற பணி ஆணையை வைத்து தன்னை ஆசீர்வதிக்குமாறு தாயின் காலில் விழுந்தான் பிரபு. தான் சிந்திய வியர்வைக்கெல்லாம் பலன் கிடைத்தது என கண்ணீரை சிந்தியவாறே மகனை அணைத்துக் கொண்டாள் பார்வதி.

*******************************************************************************நன்றி***************************************************************
************************************************************************தஞ்சை குணா**********************************************************

எழுதியவர் : மு. குணசேகரன் (4-Apr-16, 1:52 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 224

மேலே