இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா 3 வினோதன்
சித்திரையில் பூத்த
சிங்காரப் பூவே,
சிங்கப் பா(வெ)வே !
அடுத்த வயதொன்று
வரவேற்கிறது இன்று,
வாழ்த்துகள் கோடி !
என் பேனாவின் குடல்
அட்சயப் பாத்திரமாகும்,
உன்னுருவம் தீட்டுகையில் !
அன்பின் இலச்சினை
நீ - காலத்தால்
மாறா வண்ணமது !
இரக்கத்தின் இமயம்
நீ - ஒருபோதும்
குன்றா மாமலையது !
பண்பின் பத்தாயம்
நீ - எப்போதும்
தளும்பாத நிதானமது !
வாழ்வியலின் படம்
நீ - காலத்திற்கும்
அதுவே பாடமெமக்கு !
பதின்ம வயதுகளில்
வாரம் முப்பது கல்
கால்கடக்க நடந்து
கல்வி கடந்து
குருவாய் உருவானாய் !
சிறந்த ஆசானாய்
ஆளுமை செலுத்தி
பலப்பல மாணாக்கர்
மனம் வென்றாய் !
கோவம் தூக்கலாக
தொடங்கிய வாழ்க்கை
குறைந்து - கானல்நீராக
காணமலே போனது !
உம் நட்புக் காதைகளில்
சகாக்கள் வாங்கியது
ம்ருத்யுன்ஜெய வரமே !
உறவுக் கோலத்தின்
எந்தப் புள்ளியிலும்
சிக்காது - சிக்கெடுக்கும்
தெளிந்த மனமுனது !
ஓய்வு பெற்றபின்
உனக்குள்ளிருக்கும்
அழகிய குழந்தை
விரும்பி அரும்பியது !
நீ விரல் குவித்து
குத்தித் தின்னும்
கொஞ்சம் அன்னமும்
உன் எண்ணமும்
ஒரே வண்ணமே !
அடிக்கடி திறக்கும்
கண்ணீர் குடுவை - உன்
இருதயக் குட்டையின்
இரண்டாம் ஆணி வேர் !
கண்காளால் வரிகள்
குடிப்பதில் ஒட்டகம் நீ !
வாசிக்கும் புத்தகத்துள்
வசிக்கும் பழக்கமுனது !
முகமுடியோடு
புன்னகை ஏந்திய
உன் முகவாய்
மலரும் முத்தம்
அன்பின் உச்சம் !
பணம் என்பது காகிதம்
மனம் என்பது சீவிதம் என
பகுந்தாய்ந்து - நீ காட்டிய
வழிதான் - என் வழித்துணை !
உன் பாசமெனும்
பாயசத்தில் கரையாத
இதயங்கள் இல்லை !
வெகுளியாய் - உன்
பேச்சு வந்து விழும்
வெகு இயல்பாய்
மலரின் தாழ் திறப்பொத்து !
வற்றிய குட்டையின் வயிரென
கரைத்தே விட்டாய்
உன் கடமைகளை !
மிகச் சாதாரணமாய்
நிறைவானதொரு
பெருவாழ்வு உனது !
என் கதாநாயகனும்
என் கதையின் நாயகனும்
நீயும் நீயுமே !
எத்தனை ஜென்மமாயினும்
உன்னுடனே பிறக்க வேண்டுகிறேன்
ஏதாவதொரு முகமாய்
தருவாயா வரமாய் !
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா
- வினோதன்