சங்கக் கவிதை
சங்க காலக் கவிதைகளிலேயே இதை நாம் அறிய முடியும். எல்லாக் காதலுக்கும் ஒரு வெறி பிடித்த உச்சநிலை உண்டு. அந்த வரம் அல்லது சாபம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது.
முட்டுவென்கொல்? தாக்குவென்கொல்? ஓரேன்
யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஆ ஓல் எனக் கூவுவென் கொல்?
அலமரல் அசைவளி
அலப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே
என்ற ஒளவையின் சங்கப் பாடல் காதலில் தவிக்கும் பெண்ணின் தவிப்பு. இரவின் தனிமையில் காதலி சொல்கிறாள்.‘என் நோவு அறியாது தூங்குகிறது, இந்த ஊர்... நான் கத்தட்டுமா? முட்டிக்கொள்ளட்டுமா? எல்லோரையும் தாக்கட்டுமா..?' இத்தகைய உக்கிரமான காதல் மட்டுமல்ல, தன் மகள் காதலனுடன் போகும் பாதை பாலையாக இருப்பினும், அங்கே மழை பெய்து குளிரட்டும் என்று கண்ணீருடன் வாழ்த்தும் தாய் மனமும் சங்கக் கவிதையில் உண்டு.