மதுரை விழாக்கோலம் பூண்டு கள்ளழகரை வரவேற்க காத்திருக்கிறது

மதுரை விழாக்கோலம் பூண்டு கள்ளழகரை வரவேற்க காத்திருக்கிறது. வைகையில் கள்ளழகர் இறங்குமிடத்தில் தற்காலிக பாலம் அமைக்கபட்டுள்ளது. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வைகை ஆற்றில் நீர் நிரப்படுகிறது. சித்திரை மாதம் துவங்கினாலே மதுரையில் ''மீனாட்சி கல்யாணம் என்னக்கி, அழகர் என்னக்கி ஆத்துல இறங்குறாரு'' என்ற பேச்சுகள் கேட்க துவங்கும். தற்போது மீனாட்சி கல்யாணம் முடிந்து அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

அழகர்கோயிலிருந்து மதுரை புறப்படும் அழகர்

அழகர்கோயில் மதுரை அருகே மேலூர் நகரத்திற்கு தென்கிழக்கிழக்கிலிருந்து வரும் மலைத்தொடர் கிழக்காக திரும்பும் இடத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வைணவ திருத்தலம். ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஒன்பது நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நான்காம் நாள் அழகர், கள்ளர் திருகோலத்துடன் அழகர்கோயிலிருந்து புறப்பட்டு மதுரை வருகிறார். ஒன்பதாம் நாளான்று மீண்டும் கோயிலுக்கு புற்பட்டுச்செல்கிறார்.

துர்வாசமுனிவரால் தவளையாகும் படி சபிக்கப்பட்ட சுதபஸ் முனிவரின் சாபவிமேசனத்தின் நிமித்தமாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளும் பொருட்டும் ஸ்ரீசுந்தரராஜன் என்ற அழகர், கள்ளழகராக மதுரைக்கு வருகிறார் என்று கோயில் அழைப்பிதழ் கூறிகிறது. ஆனால் அழகர்,கள்ளழகராக மாறியதற்கு பின்னால் ஒரு சமூககாரணம் இருக்கிறது.

அழகர் - கள்ளழகராக

அழகர்கோயிலை கள்ளழகர் கோயில் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தான் ஆவணங்கள் கூறுகின்றன. அழ்வார் பாசுரங்களிலோ, இக்கோயிலில் உள்ள 123 கல்வெட்டுகளில் ஒன்றில் கூட கள்ளழகர்கோயில் என்ற பெயர் இல்லை. திருமாலிருஞ் சோலைமலை அழகர் மலை என்ற நூல் மட்டுமே அழகரை, கள்ளழகராக குறிப்பிடுகிறது. மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் ஆட்சிகாலத்தில்தான் அழகர் ஊர்வலம் மதுரைக்கு வந்தது, அதற்கு முன்பு மதுரை அருகே உள்ள சோழவந்தான் தேனூர் வரையே வந்து சென்றது.

அழகர்கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் கள்ளர்களே அதிகமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வைணவ மரபை சேர்ந்தவர்கள் அல்ல. மிகப்பெரிய சொத்துடமை நிறுவனமாகிய கோயிலோ மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ஆள்வலிமையும், ஆயுத வலிமையும் கொண்ட கள்ளர்கள் வருடந்தோறும் மதுரை வரும் அழகரை வழிமறித்து கொள்ளையிடுகின்றனர். இப்பிரச்சனையை தீர்கக் கோயில் பொறுப்பை ஏற்றிருந்த மேல்சாதியினரான வைணவர்கள் இறைவன் அனைவருக்கும் பொது என்ற சமரசத்திற்கு வருகின்றனர். இதன்படி கள்ளர்களுக்கு மரியாதை தரும் பொருட்டு அழகர் கோயிலிருந்து மதுரை தல்லாகுளம் பகுதி வரைக்குமான பகுதியில் அழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார்.

கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி,(தமிழர்களின் பிரத்யோக ஆயும்) சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் என அணிந்து அழகர், கள்ளழகராக மாறி மதுரை நோக்கி வருகிறார்.

வருடந்தோறும் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கின்ற திருவிழாவான சித்திரை திருவிழா என அழைக்கப்படும் இவ்விழா மக்களின் திருவிழாவாக மதுரையில் கொண்டாடப்படுகிறது. கள்ளழகருக்காக இந்தாண்டும் மதுரை காத்துக்கொண்டிருக்கிறது.

எழுதியவர் : (21-Apr-16, 5:41 am)
பார்வை : 155

மேலே