அந்த ஒருநாள் - கண்ணம்மா கவிதைகள்

அந்த ஒருநாள் - கண்ணம்மா கவிதைகள்
*************************************************************

அந்த ஒருநாள்
உன் முற்றத்தில்
காக்கை கரையாததும்
அந்த ஒருநாள்
அடுத்தவீட்டுக்காரியின் குரல்
உன் செவிகளில் விழாததும் ,,
அந்த ஒருநாள்
அப்புறத்து சிறுவர்கள் படைசூழ
உன் முகப்பறைசுவற்றில்
விரிசில்களால் களேபரம் செய்யாததும்
அந்த ஒருநாள்
உனக்குப்பிடித்த பாடல்
தொலைக்காட்சியில் இடம் பெறாததும்
அந்த ஒருநாள்
நீ ஆசைப்பட்டுக் கோர்க்கும்
வழக்கமான பூக்கள்
பூக்காரியிடம் கிடைக்காததும் ,,
அந்த ஒருநாள்
உன் பிறந்தநாளிற்காய்
பிடித்த சேலை
கொண்டுவரவில்லை என்று
சேலைக்காரியை
மலர்த்தொடுக்கும் உன் மென்குரலால்
கூச்சலிடாமல் திட்டியதும்
அந்த ஒருநாள்
பக்கத்துவீட்டு பாட்டி
உன்னிடம் சீரியல் பார்க்க வராததும்
அந்த ஒருநாள்
ஏதோ ஏக்கத்துடன்
கையில் இட்ட மருதாணி
எத்தனை சமயம் நீண்டும் சிவக்காததும்
அந்த ஒருநாள்
உன் மௌனத்தோடு
அதுவரையும் சிணுங்கிய
கால்கொலுசின் கடக்கைகளும்
தொங்கட்டாவின் ஜிமிக்கியும்
இணைப்பு முறிந்து தொலைந்துபோனதும்
அந்த ஒருநாள்
யாரோ கதவைத் தட்ட
உனக்குப்பிடித்த
என் கவிதைத் தாளொன்றை
சட்டென்று கசக்கி எறிந்து
பின் தேடிக் கிடைக்காததும்
அந்த ஒருநாள்
ஊறலிட்ட கடுமாங்காய்
புளிக்கையில்
உன் முகம் மலர்ந்து பின்மாறியதும்
அந்த ஒருநாள்
நள்ளிரவும்
அடர்வனமும்
பௌர்ணமியும்
உன் வெம்மைத் தணிக்கமோதி
தாவணி விலக்கி இளமை உலர்த்தியதும்
அந்த ஒருநாள்
புறங்கடை கிணற்றின்
ஆழத்தோடு
உன் பெண்மை மெலிய
இலயனம் மொழிந்ததும்
அந்த ஒருநாள்
நொடிகள் அவிழ்ந்து
நிமிடங்களுக்குள் நழுவ
விரல்கள் மடக்கி நகங் கடித்ததும்
என எல்லாமே
உன் யதார்த்த நிகழ்வானதுபோல
கண்ணம்மா
அந்த ஒருநாள்
நீ என்னிடம்
பேசாமல் போனதையா
பெரிதாக எடுத்துக்கொள்ளப் போகிறாய் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (8-May-16, 3:01 am)
பார்வை : 168

மேலே