பேசும் தெய்வம்
ஜனனத்தின் முதல் நாள்
மகளானவள்
மாலையிட்ட மணாளன் கைகளில்
மனைவி ஆனாள்...
மஞ்சத்தின் மடியில் பூக்களாய்
ஒரு பூவை
மண் பார்க்க தயாரானாள்......
இரத்தமும், சதையும்
ஒன்றாய்
உருட்டிப் பிசைந்து
உணர்வையும், உயிரையும்
உள் அனுப்பி
எனை தான் ஈன்றெடுத்து
தாயானாள்......
இராத்திரியின் நீளத்தில்
விளக்காய் அவள் விழித்து
நித்திரை இழந்தாள்...
என்
சிரிப்பிலும், பேச்சிலும்
தன்னையே அவள் மறந்தாள்......
பள்ளியில்
எனைச் சேர்த்து
ஏட்டறிவோடு நில்லாது
நன்னெறிகளை
பேதையாய் இருந்தாலும்
மேதையாய் அவள் போதித்தாள்......
தங்கம்
அங்கத்திற்கு சுமையென்று
அடகு வைத்து
கல்லூரியில்
படிக்க வைத்து
பட்டமும் பெற வைத்தாள்......
வேலை செய்து
இளைத்துப் போயின அவள் மேனி...
வெயிலில் வெந்து
காய்ந்துப் போன கரங்களில்
தேய்ந்து ஓடும் ரேகைகள்
அவள் உழைப்பின் உண்மைகள்......
கருணையே உருவான
அவள் மனதின் பக்கங்களில்
எத்தனையோ?...
சோகத்தின் ரேகைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
பூட்டியக் கதவினுள்
ஓடுகின்றன......
உளியே இல்லாமல்
உள்ளத்தின் இனிய மொழிகளால்
எனையவள்
எவரும் செய்திட இயலாத
சிற்பமாய்
செதுக்கி பூமித் தந்தாள்......
ஒரு முறை அல்ல
பல முறை
அவள் சுகத்தை துறந்து
என் சுகத்தை
தினம் அவள் வேண்டினாள்......
விழாது தாங்குதில் நிலமாகவும்
கவலைகள் கரைப்பதில் நீராகவும்
கண்ணீரைத் துடைப்பதில் காற்றாகவும்
பாதைத் தவறினால் நெருப்பாகவும்
பாசம் காட்டுவதில் வானாகவும்
வாழும் அன்னை அவள்......
முதுமை வந்த பிறகும்
முடங்கிப் படுக்காது
தன் பிள்ளைக்காகவே உழைக்கும்
உன்னத நெஞ்சம்
உலகிலேயே பேசுகின்ற
பெருந்தெய்வம்
அன்னை தான்......
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ....