பாய்

உறவினர் வந்துவிட்டால்
உட்காரட்டும் என்று
நீ என்னை விரிப்பாய்.

உட்கார்ந்தவர்களின்
பாரம் தாளாமல் தவிக்கும் என்
நிலை உணராமல் நீயும் அவரோடு
சேர்ந்தொன்றாய் பேசி மகிழ்ந்து சிரிப்பாய்

துணையில்லா பொழுதுகளிலும்
என்மீதே படுப்பாய்
படுத்துக்கொண்டே புத்தகங்கள் கூட படிப்பாய்

என்னில் படுத்துக்கொண்டு
ஏகப்பட்டக் கனவுகள் காண்பாய்
கற்பனைகளை வளர்ப்பாய்
புதுப்புதுத் திட்டங்களும் வகுப்பாய்

விடியல் வருபோது என்னை வெறுப்பாய்
வீட்டு விஷேசங்களுக்காக
எங்களை சார்ந்தவர்களை
நிறையவே கொண்டுவந்து குவிப்பாய் .

குவிக்கக் கிடைக்காவிட்டால் தவிப்பாய்

கல்யாண சம்பிரதாய
பரிசத் தாம்பூலத்திலே எனக்கும்
மதிப்பளித்து இடமளிப்பாய்

பச்சை குழைந்தைப் பருவம் முதல்
பாடை கிடக்கும் உருவம் வரை
பலவிதமாய் என்னை உபயோகிப்பாய்

தேவைகள் தீர்ந்ததும் மறைவாய்
சுருட்டி ஒரு மூலையில் வைப்பாய்

இப்படிப் பல பாய்களை
உன்னோடு வைத்துக்கொண்டு
எதற்காக பாயென்று எனக்கு
கேட்டுக்கொள்ளும் வேளை
ஏனிந்த பிறப்பென்று
எனக்கே என்மேல் வெறுப்பாய் ..

உன் உபயோகத்துக்காய்
உழைத்துழைத்துத் தேய்ந்திருப்பேன்
ஒரு செருப்பாய் .

என் தியாகத்தை சற்றும் எண்ணாமல்
நன்றி மறந்திருப்பாய் என்பதற்கு
சாட்சியாய் உருக்குழையும்
என்னை நீயும் தீயிட்டு எரிப்பாய்

எரியும் வேளை வெளிவரும்
புகையால் விழி வழியே ஒழுகும்
துளி வழிந்து உன் நாவில் விழுந்து
என் வேதனயை சொல்லும் உப்புக் கரிப்பாய்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-May-16, 2:46 am)
Tanglish : Boy
பார்வை : 271

மேலே