ஜிக்கூ

பிரமிளின் இன்னொரு இறகாய்
உனைத் தேடி வரும் என்னை
நீ வானமாக்கினாலும் சரி
மீண்டும் பறவையாக்கினாலும் சரி...
------------------------------------------------------------
வெற்றிடம் ததும்பும்
உன் நினைவின் உருவ நடைக்கு
நானே சாட்சி...
------------------------------------------------------------
எல்லாரும் மரம் நடுகிறார்கள்..
நீ மட்டும் தான்
நிழலையும் சேர்த்து நடுகிறாய்...
-----------------------------------------------------------
தெருவில் கிடக்கும் அத்தனை
காந்த துகள்களும்
உன் வாசலில் தான்...
-----------------------------------------------------------
நீ ஊருக்கு வரும் நாளில்
ஊரே பரபரக்கிறது....
பின்ன....ஊர்
வேடந்தாங்கல் ஆவது
யாருக்குதான் பிடிக்காது...
-----------------------------------------------------------
மதில் மேல் நிற்கும் பூனைக்கு
சந்தேகமே இல்லை..
உன் வீட்டுப் பக்கமே குதிக்கிறது...
--------------------------------------------------------
குகைக்குள் வாழ்ந்து விடலாம்...
உன் மனதுக்குள்
மூச்சு முட்டுகிறது...
-------------------------------------------------------
ஊர் திருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம்
இரண்டு தரிசனங்கள்...
ஒன்று கோயில்... ஒன்று உன் வீடு...
----------------------------------------------------------
நீ மிதிக்காமல் சென்ற
எறும்புக்கு வருத்தம்
நூலிழையில் சொர்க்கம் நழுவியதாம்..
----------------------------------------------------------------
உடுமலை கவி உன் ஊர் கவி
ஆகியிருப்பார்- நல்லவேளை
அப்போது நீ பிறக்கவில்லை...
--------------------------------------------------------------
உன் இடுப்பில் சிக்கென
அமர்ந்திருப்பது
குடங்களில் தப்பி பிறந்தவை...
-------------------------------------------------------------
மறுதலி ஆணி அடி சிலுவையில் ஏற்று
மூன்றாம் நாள் நீயே
தேடவும் செய்வாய்...
------------------------------------------------------------
முதல் முறை அம்மா என்றும்
இரண்டாம் முறை
அப்பா என்றும் தும்மி விட்டாய்..
மூன்றாம் முறைக்கு
காத்திருக்கிறேன்...
-----------------------------------------------------------
காரம் பார்த்து கண்கள் விரிய
ஸ்ஸ்ஸ் என சப்புக் கொட்டும் போது
நிஜமாகவே கொதிக்கிறது குழம்பு
-----------------------------------------------------
எதிரே வருகிறாய்
சட்டென மாறிவிடுகிறது சாலை
தொங்குபாலாமாய்...
---------------------------------------------------------
உனக்கும் சேர்த்து அடி
வாங்கினேன்...
எனக்கும் சேர்த்து படித்து வந்தாய்...
--------------------------------------------------------
மழைக்குள் நனைந்தபடி
நீ வருவதைத்தான்
மழையும் விரும்புகிறது...
---------------------------------------------------------
உன் வீட்டு கூரையில்
அமரும் காகம்
பாடுவதாக நம்புகிறது ஊர்...
----------------------------------------------------------
மொட்டை மாடியை
நிலவுக்கு வாடகை விடுவது
நீ மட்டும் தான்...
-------------------------------------------------------
தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கிறாய்...
வேர் பிடித்து நீள்கிறது
வரிசை...
-------------------------------------------------------
கவிஜி