நட்புகள் விற்பனைக்கு அல்ல

நட்புகள்
விற்பனைக்கு அல்ல!
சொல்ல
வேதனை உண்டு.
சொல்லாவிடில்
இதயம்
காயத்தில்
இரணமாகிவிடும்.

இன்று சிறிய காயம்.
நாளை பெரிதானால்
மருந்திட யாரைத் தேடுவது?
மௌனியாக நட்பு
நிற்கும் போது!

பார்வையில்
உறவானாய்.
பாசத்தில்
உயிரானாய்.
எவரோ
சொன்னதை
வைத்து
என்னைப் பிரித்து
எடைக்குப் போட்டாய்.


மரக்கிளையில்
ஓடிடும்
அணில் பிள்ளை
தவறி உயரத்திலிருந்து
கீழே விழுந்து
உணர்வற்றுக் கிடப்பது போல
நான் கிடக்கிறேன்.

எதற்கு நமக்குள்
பிரிவு என்று
விடை தேட
படைக் கொண்டு போக
நாம் விரோதிகள் அல்லவே.

இன்று
கோழிக்குஞ்சு என
சிறகடித்து
வெளியேற முயற்சித்தேன்,
தாயெனக் காப்பாய் என்று!

தள்ளிவிட்டு
என்னை எள்ளி நகையாட
உன்னைச் சுற்றிக்
கூட்டம் வைத்தாய்.

உண்ணும் போது
எனக்கு
விக்கல் எடுத்தால்
இந்தப் பாவி மனுசனை
இன்று பார்க்காமல்
வந்து விட்டோமே
என்றுதான் நினைப்பேன்.
அதுபோலத்தான்
நீயும்.

கருப்புப் பூனைக் கூட்டங்கள்
பார்வையால் என்னைச்
சுட்டெரிக்கின்றன.
நான்
சாம்பலாகி விடுவேன் என்ற
நினைப்பு அவர்களுக்கு!

சாம்பல் ஆனாலும்
திருநீறாய் உன் நெற்றியில்
இருப்பேன் என்று
அவர்களுக்குத் தெரியாது.

தேனுக்கு
தேனீ பகையென்றால்
தேனுக்கு ஏது முகவரி?

மானுக்கு நீர்
பகை என்றால்
தாகம் தீர்வதுதான் எப்படி?

நண்பனே
என்னைத் தூக்கி எறிய
உனக்குத்
தைரியம் உண்டு.
பாராட்டுகிறேன்.

என்னை எறியும் போது
டேய்... பாவி மனுசா...
உன்னை ரொம்பப் பிடிக்குமடா.
என்ற குரல்
கேட்டிருக்குமே.

பிரியா மணி அல்ல.
கற்பிழந்து கதற!
உன்னைப் பிரியா மணி!
எப்படி கற்பு தொலையும்?

உன் நண்பர்கள்
எனை எட்டிய போதும்
திட்டிய போதும்
அமைதி காத்தேன்.
கோழையல்ல
கோழையானேன்.

நீயும் -நானும்
மோதிக்கொள்வது
உறவில்.
உன்னைச் சுற்றி
நிற்போர்
என்னிடம்
நெஞ்சு நிமிர்த்தல் ஏனோ?

நீ
கோட்டு சூட்டு போட்ட
எஜமான்.
நீ
பதவி கோட்டைக்
கட்டிய இராஜா.

நான் குசேலன்.
அன்போடு
நிற்கிறேன்.
விரோதியாய் என்னைக்
கல்லெறிவது ஏன்?

ஓட வழியின்றி
மூடப்பட்ட
ஓடையில்
சிக்கிய பூனை போல
நிற்கிறேன்..
கல்லெறியும் உன்
நண்பர்களை
நிறுத்தச் சொல்.

நான்
புலியாக
நேரம் அதிகமில்லை.
மாற்றம்தான்
உலகம்.
கண்டிப்பாக மாறும்.

இன்று ஓடத்தில்
உன் நட்புகள்.
நாளை
ஓடமே எனதாகும்.

நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (21-May-16, 9:31 pm)
பார்வை : 580

மேலே