அன்பே நீ வந்தபோது -18 காதல்மலரைப் பறித்துவிடு
இளமை நதியில்
மிதந்து வந்த
என் இனிய மலரே!
இந்தப் படித்துறையில்
பட்டு பட்டு சென்றாயே
மயக்க மூட்டும்
அந்த வாசனையை
நதியின் அலைகள்
அடித்துச் சென்றதே!
இன்ப வெள்ளத்தில்
என் மனம் நீராடி
இசை பாடியதே!
என் இதயம் நனைந்த
இன்ப நீரை அள்ளி
ஏந்திய குடங்களை
உன் இடையில்
சுமந்து சென்றாயே
உன் இடை நழுவி
அது வீழ்ந்தால்
என் இதயம் உடைந்து
துன்பக் குரலாய்
துள்ளிச் சிதறாதோ!
என் தோட்டத்தில்
மூங்கில் புதர் ஒன்று
காற்றிலாடி கையசைக்கும்
குயிலே உனக்காக!
என் கண்ணீர்ப் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதான்
இருக்கும்
நீ காற்றாக இருக்கும்வரை!
!கைகளாக வந்து
காதல் மலரைப் பறித்துவிடு
என் இதயத்தேன்
சிந்துவதற்குள்!