காதல் கணக்கு

இப்போதெல்லாம்
நொடிக்கொருமுறை
உன்னை சொந்தம்
கொண்டாடுகிறேன்.
என் சோளக்காட்டு
காளான்களாய்.
என் மாட்டுக்கொம்பு
மணியோசையும்
தோற்று நிற்கிறது
உன் கால் கொலுசு
தரும் இசையோசையில்.
அந்த சத்த சந்தங்களில்
சப்த நாடிகளும்
அரிச்சுவடி கற்கிறது
இது சந்தர்ப்பவாதமில்லை.
என் நாடி பிடித்துப்பார்...
உன் கந்தர்வ அமில
தொடு உணர்வில்
கரைகிறேன் என்பதும்
உனக்குத் தெரியவரும்.
கண்ணிமைத்து
நீ தொடுக்கும்
கண நேர பார்வை அம்புகளில்
இளகிக்குழைந்து
எனக்குள் நானே
குறைந்த காற்று
மண்டலமாகிறேன்.
இந்த
காதல் விஞ்ஞானத்தின்
சாத்திரமில்லா
கோட்பாடுகளில்
காதல் சுனாமியாகிறேன்
நான்...!
பெளர்ணமி ஒளிகூட
உன்னை
காயப்படுத்திவிடும் என்று
மேகமாய் மறைக்க
எனக்குள் பரிதவிப்பு..
அதுவும்
அமாவாசை முதலே
தொடங்கிவிடுகிறது..!
உன் முகம் சிவக்கும்
சிக்கனக் காதலை
வரவு வைத்து
என் காதல் இதயத்தை
பற்று வைக்க ஆசை..
அதில் வரும் நினைவுகளின்
வட்டி காணும் சூத்திரத்தை
சொல்லித்தருவாயா..?
அல்லது
வாராக்கடன் என்று
வார்த்தைகளில்
சரிக்கட்டிவிடுவாயா ?
என் நினைவுகளின்
வங்கிச்சரிக்கட்டும் பட்டியல்
உன்னால் இன்னும்
சமன் செய்யப்படாமல்....
அதற்குள் நீயெப்படி
காதல் கணக்கை
தணிக்கை செய்தாய்..?
என் ”மெய்”கணக்கு
உன் பொய்க்கணக்குத்
தணிக்கையில்
புதைந்து போக விரும்பினால்
உன் கணக்கு சரிதான்.