பயமா இருக்குடா குட்டிக்கதை

...............................................................................................................................................................................................

சீரான வேகத்தில் பைக்கை ஓட்டி வந்தான் சேது. பைக் வெளிச்சத்தை வாங்கி சிறிது தூரத்துக்கு ரிப்ளெட்டர்கள் பவளமாய்த் தகதகத்தன. இதைத் தவிர வேறு பொட்டு வெளிச்சமில்லை. புதிதாய் ஒரு அவசர கதியில் போடப்பட்ட சாலை.. பாதைக்காக வெட்டப்பட்ட மரங்கள் எலும்புக் கூடுகளாய் இருமருங்கும் கிடந்தன. தெரு விளக்குக்காக கம்பம் மட்டும் நடப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகள் மத்தியில் இன்னும் பிரபலமாகாத பாதை.. சாலையில் மனித நடமாட்டத்தை விடுங்கள்... நாயோ பேயோ கூட நடமாடவில்லை...

சேது தலையைக் குலுக்கிக் கொண்டான்- தன் எண்ண ஓட்டம் எந்தப் பேயின் காதிலாவது விழுந்து வைக்கப் போகிறது... மணி பார்த்தான்.. மணி இரவு ஒன்று இருபது...

ஓரிடத்தில் சின்னக் கும்பல் மெதுவாகக் கலைந்து கொண்டிருந்தது ...

“வானாபுரத்துகிட்ட ஆக்சிடெண்ட்.. பைக்கும் லாரியும்.. வயசு முப்பது முப்பத்தஞ்சு இருக்கும்.. ஆளுக்கு நல்ல அடி.. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க..... ”

ஜனங்கள் பேசிக்கொண்டு சென்றார்கள்..

சேதுவின் மனம் இன்று வெற்றிகரமாக முடித்த பிசினஸ் டீலில் இருந்தது.. மூன்று நாட்கள் அவனைத் தூங்க விடாமல் அலைக்கழித்த விவகாரம்...! ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் வரலாம்... வேலை முடிந்தாலும் அதன் தாக்கம் மனதில் இன்னும் தங்கியிருந்தது... கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சின...

ஜனங்களின் பேச்சை அவன் காது கிரகித்துக் கொண்டிருந்தது..

வானாபுரம்.. நண்பன் ரகுநந்தன் வீடு அங்குதான் இருக்கிறது... இந்த ரகுநந்தன் ஒழுங்காக பைக் ஓட்ட மாட்டான்...

சேதுவின் வீட்டில் அவனைத் தவிர மற்றவர்கள் ஒரு கல்யாணத்துக்காக செங்கல்பட்டு போயிருந்தனர். வீட்டை சாவி போட்டுத் திறந்த சேது, கை கால் முகம் அலம்பிக் கொண்டு குளிர் பதனப் பெட்டியை திறந்து பார்த்தான்.. கொஞ்சம் பாலை அப்படியே வாயில் சரித்தான்...

வெறும் தரையில் தலையணை போட்டுக்கொண்டு அப்படியே தூங்கி விட்டான்..

“ கரம் கரம்.. டண் டடய் கரம் கரம்.. ” அலைபேசி அடித்தது.. அடித்தபடி இருந்தது...

கையிலெடுத்து காதில் வைத்தான்.. கண்கள் மூடியவாறு ... ஹால் கடிகாரம் இரண்டு முறை அடித்தது..

“ டேய்.. சேது...! நான் ரகுநந்தன் பேசறேண்டா... நா.. இங்க தனியா மாட்டிகிட்டேண்டா... பயமா இருக்குடா... ரொ.. ரொம்ப பயமா இருக்குடா.. நீயும் கூட வாடா.. ”

“ ம்...ம்... ”

“ நா வந்து ஒன்னை கூட்டிட்டு போறேண்டா... ”

“ ம்..ம்.. ... கொர்..கொர்... ”

அவன் அறையிலிருந்த பெரிய பீரோ யாரோ தள்ளி விட்டதைப் போல் சரிய.....

சேது புரண்டு படுத்தான்.....

அதிகாலை நான்கு மணிக்கு காதரிடமிருந்து ஃபோன்..

“ டேய் சேது.. விஷயம் தெரியுமாடா? நம்ப ரகுநந்தனுக்கு ஆக்ஸிடெண்ட்.. ராத்திரி ஒரு மணிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு.. ரெண்டு மணிக்கு ஆஸ்பத்திரியில வச்சு செத்துட்டான்..
புறப்பட்டு வாடா.. ”

சேதுவுக்கு தூக்கம் முழுதுமாகக் கலைந்தது.. அது அதிர்ச்சியாக இருந்தது... பயமாகவும் இருந்தது....... ! !

அவன் தன்னையும் அறியாமல் தயங்கித் தயங்கி.... தயங்கித் தயங்கி....

பீரோ வைத்திருந்த இடத்தைப் பார்த்தான்..

அலைபேசி வழியே அந்த சேதி கேட்டதற்கும் அவன் பீரோவை கவனிக்க கண்களைத் திருப்பியதற்குமான இடைப்பட்ட நேரம் சில நொடிகள்தான்..

அதற்குள் இதயம் தடதடத்தது.. முதுகெலும்பில் சிலீரென்ற பயம் ஊடுருவியது..

அப்படியே இருந்தது பீரோ...

அதன் கால் பகுதியில் உன்னிப்பாக கவனித்தான்.. ஏதாவது தூசு துணுக்குகள் தெரிகிறதா- நகர்த்தப்பட்டதன் அடையாளமாக...?

ஒன்றுமில்லை...!

அலைபேசியில் கால் ரெஜிஸ்டரை ஸ்க்ரோல் செய்தான்..

ஏதோ எண் தானாக அழிந்த மாதிரி இருந்தது...! ! ! !
................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Jun-16, 3:23 pm)
பார்வை : 352

மேலே