வெற்றியோடு திரும்பி வா

அடக்குமுறைச் சிறைதனிலே அடைத்து வைத்து
=அதிகாரக் கடிவாளம் அதனைப் பூட்டி
கிடந்திடுநீ எனப்பெண்ணைக் கிடத்தி வைத்தக்
=கிடங்கினிலே கிடக்காமல் கீர்த்திப் பெற்று
முடக்கிவைத்த மூடர்களின் முடிவை எதிர்த்து
=மூட்டிவிடும் தீஎடுக்கும் முனைப்பு கொண்டு
தொடக்கமிட விடுதலைக்குத் துணிச்சல் ஏற்றி
=துயர்களைய சிறகடிப்பாய் தூரம் தாண்டி .
சிறகொடித்துப் பார்க்கின்ற சிந்தை வளர்த்து
=சிங்காரப் பெண்ணினத்தைச் சிதைக்கும் மாந்தர்
உறங்குகின்ற உணர்ச்சிகளை உசுப்பி விட்டு
=உல்லாசக் குளிர்காய்ந்து ஊதித் தள்ளும்
நிறம்மாறும் பச்சோந்தி நிலையைக் கொன்று
=நிழல்தேடி இளைப்பாறும் நோக்கம் கொண்டு
பறவையிடம் பறப்பதற்குப் பயிற்சிப் பெற்று
=பறக்கின்ற உன்வானம் பகைமைக் கொல்லும்
சின்னஞ்சிறு சிறுமியரின் சிங்கா ரத்தைச்
=சீரழித்துச் சிதைக்கின்ற சிறுமை கொண்டு
இன்னமுதச் சாற்றினிலே இங்கித மற்று
=ஏற்றுகின்ற கொடும்விஷத்தால் இரக்கம் தொலைத்து
உன்னதமாய் நடமாடும் ஓநாய்க் கூட்டம்
=ஒவ்வொன்றாய் களையெடுக்கும் உந்தன் கழுகுத்
தன்மையுளப் பார்வையினால் தரணி விட்டுத்
=தலைதெறிக்க ஓடவட்டம் தனைநீ போடு
பாதணிக்குச் சமமாகப் பாரில் பெண்ணை
=பயன்படுத்திப் பார்க்ககின்ற பார்வை மாற்றி
காதணியில் மின்னுகின்ற கற்கள் போன்று
=கர்வமுடன் சொலித்திருக்கும் காட்சிக் காண
தூதெடுத்து நீபறக்கும் தூர வானம்
=தொட்டுவரும் வெண்ணிலவின் தூய்மை பட்டு
வேதமென பெண்ணினத்தை விரும்பி ஓத
=விதிசமைத்து திரும்புநீ வெற்றி யோடு
*மெய்யன் நடராஜ்