இந்த இரவு
கிளையற்ற மரத்தினைப் போல்
ஒற்றை உடலோடு உறைகிறது
இந்த இரவு.
தடித்த மழைத் துளிகளைக்
கோர்த்தபடி
அறுத்தெடுத்து ஓடும் நதியாய்
மின்மினிகளின் வெளிச்சத்தில்
கரையற்றுத் தளும்புகிறது அது.
சாயமற்ற அதன் உதடுகள்
நீள் விரிந்த சித்திரமாகி
பூமியின் ரேகைகளில்
உபரிச் சொற்களைப் பதிக்கிறது.
மலைச்சரிவில்
வார்த்தைகளற்றுப் போன
மின்னலைப் போல்
துயரின் தும்பிகளை மறைத்தபடி
விடியலில்
மெல்ல மூழ்குகிறது கடலுக்குள்.
செப்பனிடப் படாத வயல் வெளியில்
நான் நடந்து செல்கையில்
இரவு...
பறந்து திரிந்த காலத்தை
மெல்லிய ஓசையில் சொல்கிறது
மௌனம் துறந்த
விரியும் பூ.