உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ,,

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்...
**********************************************************************************

நாளை வரப்போகும் அவனுக்காய்
அவளுடைய பொம்மை விமானங்களுக்கு
விடுதலை தருவாள்
இறுக்கிப்பிடித்த மார்புத்துணியை
இலேசாக்கி தளர்த்துவாள்
நடுக்கத்தில் நடுக்கட்டு அவிழுமோ என
பிடித்துக்கொள்வாள்
கண்களால் ஆயிரம் இராட்டினம் சுற்றுவாள்
கன்னங்களில் கட்டியிருக்கும்
வரிகள் முறிய
சிவந்து சிரிப்பாள்
தலைவாசலில்
அழகான கோலமிட்டு
அவன் முகம் வரைந்து அழிப்பாள்
காக்கைகள் தொங்குமணியை
எண்ணற்ற தடவை அசைக்க
முன்கதவுவரை ஓடி களைப்பாள்
தேர்வு செய்ய
புடவைகளை எடுத்துவிட்டு
சிக்கல்கள் செய்து ஒளிந்திருப்பாள்
இருபத்திநான்குமணி நேரங்களுக்குள்
சுழலும் கடிகாரமாவாள்
தொலைக்காட்சியின் சேனல்களை
மாற்றி மாற்றி சலித்துதான் போவாள்
உப்பரிகையில் நின்றுவிட்டு
தெருக்களை வேடிக்கைப் பார்ப்பாள்
பிடித்தமான இசையில்
ஆர்வம் காட்ட மறுப்பாள்
படுக்கையில் விரிந்த புத்தகங்களை எல்லாம்
வேகமாக புரட்டுவாள்
தொலைப்பேசி இருக்கும் இடத்திலேயே
ஆகாரமின்றி தவமிருப்பாள்
அணைக்கப்பட்ட எண்களுக்கு
வெருதையேனும் டயல் செய்வாள்
தவறி விழுந்த தவறுகளால்
தன்னைத்தானே தலையில் அடித்து
பொன்முறுவல் உறுவாள்
தன்னில் நனைந்த
தலையணை நிர்வாணத்திற்கு
அன்றுதான் ஆடைத் தைப்பாள் ம்ம்
போர்வை எழுப்பும்
சிணுங்கள்களுக்கு பயந்து
கழட்டிவைத்த
கொலுசு மெட்டி மணிகளை
அன்றுதான் வெட்கக் கோர்வை கோர்ப்பாள்
பூச்செடியின் காய்ந்த சருகுகளோடும்
சிறுகாம்புகளோடும்
சண்டை புரிவாள்
நிலைக் கண்ணாடிக்குப் பின் சுவற்றில்
அவள் நடுவிரல் அழித்த
சாந்துபொட்டு கோடுகளில்
பிரிந்திருந்த நாட்களை
கணக்குப் போட்டு குழம்புவாள்
அவன் பின்னாலிருந்து
அணைத்துக்கொள்ள ஏதுவாய்
இடையளவு சரிபார்ப்பாள்
நேரங்கள் போய்க்கொண்டிருக்க
நெஞ்சமெல்லாம் பதைப்பதைப்பாள்
வந்தவனின் வார்த்தையெல்லாம்
யாருக்கென்றோ இருந்துவிட
கொஞ்சும் மொழி நாணத்தாலே
ஒரு பார்வை மட்டும் கெஞ்சிநிற்பாள்

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ,,

"சரண்"

எழுதியவர் : அனுசரன் (18-Jun-16, 7:08 am)
பார்வை : 241

மேலே