சொல்லாலே தோன்றும் சுகம் – நேரிசை வெண்பாக்கள்

சொல்லாலே தோன்றும் சுகம்! – ஒரு விகற்ப நேரிசை வெண்பா

சொல்லில் பயனுடைய சொல்லுக; பெற்றிடுவீர்
எல்லையில்லா இன்பமும் ஏமாப்பும் – நல்லோரின்
சொல்மொழி நல்கிடுமே சொர்க்கமும் நான்மறையும்
சொல்லாலே தோன்றும் சுகம்! – வ.க.கன்னியப்பன்

சொல்லாலே தோன்றும் சுகம்! - இரு விகற்ப நேரிசை வெண்பா

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவர்(கு)
அணியல்ல மற்றுப் பிறவாம் – துணிந்தேதான்
சொல்லுகின்ற வள்ளுவர் வாக்கென்றும் சொல்லுமே
சொல்லாலே தோன்றும் சுகம்! – வ.க.கன்னியப்பன்

ஜூலை 2016 'அமுதசுரபி' மாத இதழில் பரிசு பெற்ற வெண்பாக்கள்

முதல் பரிசு

வள்ளுவத்தில் கம்பனில் வண்ணச் சிலம்பதனில்
தெள்ளுதமிழ்த் தெய்வச்சீர் தேவாரம் – விள்ளுமுயர்
நல்லதிரு வாசகத்தில் நாளும் திளைத்தவரின்
சொல்லாலே தோன்றும் சுகம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

இரண்டாம் பரிசு

தொட்டில் குழந்தை துயில்கொள்ளும் காட்சியிலே
கொட்டிக் கிடக்குதம்மா கோடியெழில் – தொட்டவுடன்
பொல்லாக் குறும்புடனே பொன்மழலை சிந்துகின்ற
சொல்லாலே தோன்றும் சுகம்! – குமரி அமுதன்

மூன்றாம் பரிசு

உச்சிமேல் கைவைத்(து) உவப்போடு காலசைத்து
இச்சை யுடன்தன் இமைவிரித்துப் – பச்சரிசிப்
பல்தெரியப் பெற்றபிள்ளை பேசிகின்ற தேன்மழலைச்
சொல்லாலே தோன்றும் சுகம்! – கோ.பாலசுப்பிரமணியன்.

எனக்குப் பிடித்த பிற வெண்பாக்கள்

அறநூல்கள் சொல்லும் அறிவுரையும், ஆன்றோர்
அறவுரையும் உள்ளமதில் ஆழ்த்தி – மறவாது
கல்லாரை நீக்கியே கர்வமிலா சான்றோர்செஞ்
சொல்லாலே தோன்றும் சுகம்! – இரெ.இராமமூர்த்தி, சிதம்பரம்

அல்லல் அகற்றும் அறிவாலும் அன்பாலும்
பொல்லா தனபோக்கி எல்லோரும் – நல்லவராய்
வல்லவராய் வாழ வழிகாட்டும் வள்ளுவரின்
சொல்லாலே தோன்றும் சுகம்! – தெ.அண்ணாசாமி, கே.கே.நகர்

கோயில் மணியெழுப்பும்; காக்கும் கதிரெழுப்பும்;
நோயில் படுத்தோரை மீளெழுப்பும் – சேயோன்
மால்மருகன் ஈசனுக்குத் தானுரைத்த ஓமெனும்
சொல்லாலே தோன்றும் சுகம்! – வரத..சண்முகசுந்தர வடிவேலு, வாழப்பாடி

நம்மை நலமுடன் ஈன்றெடுத்த அன்னைக்கும்
செம்மை யுறக்காக்கும் தந்தைக்கும் – நம்மீது
செல்லமாய் அன்புகொள்ளும் நம்தாத்தா பாட்டிக்கும்
சொல்லாலே தோன்றும் சுகம்! – ரா.க.கா.ரங்கசாமி, சேலம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-16, 2:48 pm)
பார்வை : 206

மேலே